தூத்துக்குடி அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் சேர்க்கை கடந்த ஜூன் மாதம் 28-ந் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த பள்ளியில் சேருவதற்கு வயது வரம்பு 12 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். குரலிசை, பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தவில், நாதசுரம் ஆகிய கலைகளுக்கு எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. இசைப்பள்ளி படிப்பின் காலஅளவு மூன்று ஆண்டுகள் ஆகும்.
இசைப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.400 கல்வி உதவித்தொகை வழங்கப்படும். அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் அரசு விடுதி வசதியும் செய்து தரப்படும். வெளியிடங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண வசதியும் செய்து தரப்படும்.
3 ஆண்டுகள் பயின்று அரசுத்தேர்வுகள் இயக்ககம் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் கர்நாடக இசை கச்சேரிகள் நடத்தவும், நாதசுரம் மற்றும் தவில் வாசித்து தொழில் புரியவும், தேவாரம் பாடுதல் மற்றும் கோவில்களில் பணிபுரியவும் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகளில் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் உள்ளன. கோவில்களில் தேவாரஓதுவார் பணியில் சேர்ந்திட தேவார இசை பயின்று தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு முன்னுரிமை அளித்து வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.
எனவே கலை ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தலைமைஆசிரியை, மாவட்ட அரசு இசைப்பள்ளி, டி.சவேரியார்புரம், தூத்துக்குடி-2, தொலைபேசி எண் 94877 39296 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story