தூத்துக்குடி பேராசிரியையிடம் ரூ.50 ஆயிரம் மோசடி; 2 என்ஜினீயர்கள் கைது
தூத்துக்குடியில் பேராசிரியையிடம் நூதன முறையில் ரூ.50 ஆயிரம் மோசடி செய்த 2 என்ஜினீயர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ராஜகோபால் நகர் கீரீன்வேஸ் காலனியைச் சேர்ந்தவர் பீட்டர் அமலதாஸ். இவருடைய மனைவி அமலா அருளரசி. இவர் தூத்துக்குடியில் உள்ள கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் 12-ந்தேதி இவரது செல்போனுக்கு வந்த ‘வாட்ஸ்-அப்’ தகவலில், அவரது கல்லூரி முதல்வரின் படத்துடன் தனியார் இணையவழி வர்த்தக நிறுவன இ-கிப்ட் கார்டு வாங்கி அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து அமலா அருளரசி கல்லூரி முதல்வரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. எனவே ‘வாட்ஸ்-அப்’பில் வந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அதில் பேசிய நபர், தற்போது கல்லூரி முதல்வர் ஆஸ்பத்திரியில் இருப்பதாகவும், அவரை தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் கூறி உள்ளார். மேலும் இ-கிப்ட் கார்டை வாங்கி தனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறும் கூறினார்.
இதனால் கல்லூரி முதல்வருக்கு பண உதவி தேவைப்படுகிறது என்று கருதிய அமலா அருளரசி ரூ.50 ஆயிரத்துக்கு இ-கிப்ட் கார்டு வாங்கி, அந்த நபரின் மின்னஞ்சலுக்கு அனுப்பினார். தொடர்ந்து அமலா அருளரசியை தொடர்பு கொண்ட அந்த நபர் மேலும் ரூ.45 ஆயிரத்துக்கு மற்றொரு இ-கிப்ட் கார்டு வாங்கி அனுப்புமாறு கூறினார்.உடனே அமலா அருளரசி கல்லூரி முதல்வரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், தான் நலமாக உள்ளதாகவும், பண உதவி கேட்டு யாருக்கும் தகவல் அனுப்பவில்லை என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், சைபர் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் மேற்பார்வையில் போலீசார் தொழில்நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஈரோடு மாவட்டம் குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்த என்ஜினீயர்களான முருகையன் மகன் மோகன்பாபு (வயது 26), பழனிசாமி மகன் சங்கர் (27) ஆகிய 2 பேரும் அமலா அருளரசியிடம் நூதன முறையில் ரூ.50 ஆயிரத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறுகையில், ‘நண்பர்கள், உறவினர்கள் பெயரை பயன்படுத்தி இணையதளம் மூலமாக பண உதவி கேட்டு வரும் செய்திகளை நம்பாதீர்கள். உடனே சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு பேசி உறுதிப்படுத்துங்கள். இணையதளம் வழியாக ஏதாவது மோசடி நடைபெற்றால் உடனடியாக சைபர் குற்றப்பிரிவு போலீசாருக்கு 155260 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்’ என்றார்.
Related Tags :
Next Story