பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 4 பேர் படுகாயம்
தோகைமலை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
தோகைமலை
குலதெய்வ கோவில்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ஜே.ஜே. நகரை சேர்ந்தவர் ரவி (வயது 50), கொத்தனார். இவர் தனது மனைவி சித்ரா (40), மகன் கபிலன் (28) ஆகியோருடன் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள உல்லியாகோட்டை என்ற ஊரில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றார்.
திருச்சி திருவானைக்காவலை சேர்ந்த ரெங்கநாதன் (39) காரை ஓட்டி சென்றார். குலதெய்வ கோவிலுக்கு சென்ற ரவி பூஜையை முடித்து விட்டு தனது குடும்பத்தாருடன் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தார்.
பள்ளத்தில் கவிழ்ந்த கார்
தோகைமலை-திருச்சி மெயின் ரோட்டில் ஆர்.டி.மலையில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்திசையில் நெல் உமி மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக ரவி சென்ற கார் மீது உரசியது. இதனால் காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்தவிபத்தில் கார் டிரைவர் ரெங்கநாதன், ரவி உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.
டிரைவருக்கு வலைவீச்சு
இதையடுத்து, அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காரில் இருந்த 4 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கார் டிரைவர் ரெங்கநாதன் அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story