கிருஷ்ணகிரியில் பயங்கரம் சண்டை சேவல் விவகாரத்தில் வாலிபர் குத்திக்கொலை தந்தை- மகன் வெறிச்செயல்
கிருஷ்ணகிரியில் பயங்கரம் சண்டை சேவல் விவகாரத்தில் வாலிபர் குத்திக்கொலை தந்தை- மகன் வெறிச்செயல்
கிருஷ்ணகிரி:
சண்டை சேவல் விவகாரத்தில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தை, மகனை போலீசார் தேடி வருகிறார்கள்.
இந்த பயங்கர கொலை பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சண்டை சேவல்
கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அகமது மகன் இம்ரான் (வயது 22). வெல்டிங் பட்டறை தொழிலாளி. மேலும் சண்டை சேவல் வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வந்ததோடு, சண்டை சேவல் பந்தயத்திலும் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் இம்ரான், கிருஷ்ணகிரி நேதாஜி சாலை பகுதியை சேர்ந்த மார்கோ (56) என்பவரிடம் சண்டை சேவலை வாங்கினார். அந்த சேவலுடன் ஆந்திர மாநிலத்தில் நடந்த போட்டியில் பங்கேற்றார். போட்டியின் போது சேவல் சரியாக சண்டையிடவில்லையாம்.
இதனால் ஆத்திரம் அடைந்த இம்ரான், நீங்கள் தந்த சேவல் சரியாக சண்டையிடவில்லை என மார்கோவிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது
குத்திக்கொலை
நேற்று காலை கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் தியேட்டர் அருகில் இம்ரான், மார்கோ இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த மார்கோ, அவருடைய மகன் குல்பி என்கிற மணிமாறன் (30) ஆகிய 2 பேரும் இம்ரானை கத்தியால் சரமாரியாக குத்தியதாக கூறப்படுகிறது. இதை தடுக்க சென்ற இம்ரானின் அண்ணன் சலாவுதீன் (36) என்பவருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
இதில 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். பின்னர் மார்கோவும், அவருடைய மகன் குல்பியும் அங்கிருந்து தப்பி சென்றனர். ரத்தக்காயங்களுடன் கிடந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே இம்ரான் இறந்து விட்டார். சலாவுதீனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
தகவல் அறிந்ததும் இம்ரானின் உறவினர்கள் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி, துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீசார் ஆகியோர் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சண்டை சேவல் வாங்கிய விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்சினையில் இந்த கொலை நடந்தது தெரியவந்தது.
கொலையாளிகள் மார்கோ, அவரது மகன் மணிமாறன் ஆகியோர் பழைய குற்றவாளிகள் என கூறப்படுகிறது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை காரணமாக கிருஷ்ணகிரி டவுன் பகுதியில் நேற்று காலை பெரும் பரபரப்பாக காணப்பட்டது.
Related Tags :
Next Story