கீரனூர் அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி? மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்


கீரனூர் அருகே  பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி? மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 15 Aug 2021 1:26 AM IST (Updated: 15 Aug 2021 1:26 AM IST)
t-max-icont-min-icon

பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது.

கீரனூர்:
கீரனூர் ரெயில் நிலையத்திலிருந்து புதுக்கோட்டை செல்லும் தண்டவாள பகுதியில் 3 கிலோ மீட்டர் தூரத்தில் மேம்பாலம் ஒன்று உள்ளது. இரண்டு ரெயில்கள் பிரியும் இடம் ஆகும். கடந்த10-ந்தேதி அதிகாலை அந்த வழியாக மானாமதுரையில் இருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ்  ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் வரிசையாக கற்கள் அடுக்கி வைத்ததால், அதன் மீது பயங்கர சத்தத்துடன் ரெயில் மோதி நின்றது. ரெயில் திடீரென பிரேக் போட்டு நின்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ரெயில் நின்ற பாலம் அடியில் 500 அடி பள்ளம் உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக விரைந்து வந்து கற்களை அகற்றி ரெயிலை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டு, ரெயில்வே போலீசார் கடந்த 4 நாட்களாக சுற்றுவட்டார கிராம புறங்களில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மேலும் சம்பவத்தன்று அந்தப் பகுதியில் வந்து சென்றவர்கள் யார்? என்பது குறித்து செல்போன் டவர் மூலம் கண்டு பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரெயில்வே போலீசார் 6 குழுக்களாகப் பிரிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று சுதந்திர தினம் என்பதால் நாசவேலையில் யாரும் ஈடுபட்டனரா அல்லது விளையாட்டுத்தனமாக கற்களை அடுக்கி வைத்திருந்தனரா என்பது குறித்து விசாரணை நடக்கிறது. இது சம்பந்தமாக திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தண்டவாளத்தில் கல் வைத்த மர்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக உள்ளனர்.

Next Story