மீன் வளர்ப்பதற்கு 50 சதவீதம் மானியம்; கலெக்டர் தகவல்


மீன் வளர்ப்பதற்கு 50 சதவீதம் மானியம்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 15 Aug 2021 1:43 AM IST (Updated: 15 Aug 2021 1:43 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் மீன் வளர்ப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மீன் வளர்ப்பதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது என்று கலெக்டர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மீன் வளர்ப்புக்கு மானியம்

தென்காசி மாவட்டத்தில் மீன் வளர்ப்பினை விரிவுபடுத்த மற்றும் மீன் குஞ்சு உற்பத்தியை அதிகரிக்க புதிய குளம் அமைத்து உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி மீன் வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகள் ஒரு எக்டேரில் ரூ.7 லட்சம் செலவு செய்து மீன் குளம் அமைக்க 50 சதவீதம் மானியமாக ரூ.3½ லட்சம் அரசு வழங்குகிறது. மேலும் ஒரு எக்டேர் நீர்பரப்பில் மீன் வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவினங்களுக்கு (மீன் குஞ்சு, மீன் தீவனம் மற்றும் இதர செலவினங்களுக்கு) ரூ.1½ லட்சத்தில் 40 சதவீதமாக ரூ.60 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

இணையதளம்

இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு சொந்த நிலம் அல்லது குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பதிவு செய்யப்பட்ட குத்தகை ஒப்பந்தம் இருக்க வேண்டும். மீன் வளர்ப்பு அல்லது மீன் குஞ்சு வளர்ப்பிற்கு ஏற்ற நீர் ஆதாரம் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை www.tenkasi.nic.in/forms/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம், 42C, 26-வது குறுக்குத்தெரு, மகாராஜா நகர், திருநெல்வேலி, என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story