குடிநீருக்காக அணை கட்டுவது அவசியமானது; மேகதாது அணை குறித்த கேள்விக்கு சி.டி.ரவி எம்.எல்.ஏ. மழுப்பல்


குடிநீருக்காக அணை கட்டுவது அவசியமானது; மேகதாது அணை குறித்த கேள்விக்கு சி.டி.ரவி எம்.எல்.ஏ. மழுப்பல்
x

மேகதாது அணை குறித்து கருத்து கூறமாட்டேன் என்றும், ஆனால் குடிநீருக்காக அணை கட்டுவது அவசியமானது என்றும் சி.டி.ரவி எம்.எல்.ஏ. கூறினார்.

சிக்கமகளூரு:

சி.டி.ரவி எம்.எல்.ஏ.

  சிக்கமகளூரு மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக அய்யன்கெரே மற்றும் இரேகொலலே உள்ளிட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் நேற்று அய்யன்கெரே குளத்தில், சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ. சி.டி.ரவி பாகினா பூஜை செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
   இயற்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கு நமது கலாசாரத்தில் பூஜை செய்யப்படுகின்றது. அந்த வகையில் குளங்களுக்கு பூஜை செய்து வழிபட்டால் ஆண்டுதோறும் நல்ல மழை பெய்யும்.

  மாநிலத்தில் இந்திரா உணவகத்தை கொண்டு வந்து அதன்மூலம் பல கோடி ரூபாய் காங்கிரசார் சுருட்டி உள்ளனர். அதனால், இந்திரா உணவகத்திற்கு அன்னபூர்னேஸ்வரியின் பெயரை வைக்க வேண்டும் என கூறினேன். ஆனால் காங்கிரசார், அதை ஒரு விவாத பொருளாக மாற்றி என்னை அவதூறாக பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நான் கெட்டவன் கிடையாது

  காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். ஆனால் குடிநீருக்காக அணை கட்டுவது அவசியமானது என்று அனைவருமே அறிவார்கள். இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் உள்ளதால் தற்போது நான் எதுவும் கூற விரும்பவில்லை.

  காங்கிரசார், என்னை அவதூறாக பேசி வருகிறார்கள். நான், கெட்டவன் கிடையாது. எனக்கு எந்தவிதமான கெட்ட பழக்கமும் கிடையாது. குடிகாரனும் இல்லை. மக்களுக்காக சேவையில் ஈடுபட்டு வருகிறேன்.
  இவ்வாறு அவர் கூறினார்.

மழுப்பல்

  பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளராக இருக்கும் சி.டி.ரவி, தமிழக பா.ஜனதா மேலிட பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் தமிழ்நாட்டில் வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்கும் வகையில் பேசினார். ஆனால் தற்போது அவர் மேகதாது விவகாரத்தில் மழுப்பலாக பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story