இந்திரா உணவகத்தின் பெயரை மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை; மந்திரி கோவிந்த் கார்ஜோள் பேட்டி
கர்நாடகத்தில் இந்திரா மலிவு விலை உணவகத்தின் பெயரை மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை என்று மந்திரி கோவிந்த் கார்ஜோள் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெயரை மாற்ற வலியுறுத்தல்
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இந்திரா மலிவு விலை உணவகம் உள்ளது. இந்த உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று பா.ஜனதா பொதுச் செயலாளர் சி.டி.ரவி உள்பட பா.ஜனதா தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பா.ஜனதா தலைவர்களின் வலியுறுத்தல் காரணமாக இந்திரா மலிவு விலை உணவகத்தின் பெயரை மாற்றுவதற்கு கர்நாடக அரசு ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோளிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதலளித்து அவர் கூறியதாவது:-
மாற்றும் எண்ணம் இல்லை
ஏழை மக்கள் குறைந்த விலையில் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இந்திரா மலிவு விலை உணவகத்தில் சாப்பிட்டு வருகிறார்கள். இந்த உணவகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், உணவகத்தின் பெயரை மாற்ற கூடாது என, அக்கட்சி தலைவர்கள் கூறி வருகிறார்கள். தற்சமயம் வரை மாநிலத்தில் உள்ள இந்திரா உணவகத்தின் பெயரை மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை.
அதுபற்றி எந்த ஒரு ஆலோசனையும் தற்போது நடைபெறவில்லை. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்த பிரச்சினையை பெரிதுபடுத்தி பேச வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் மோடி பதவி ஏற்ற பின்பு பல்வேறு நலத்திட்டங்களுக்கு பிரதமரின் பெயரிலேயே திட்டத்தை தொடங்கி உள்ளார். ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு பெயர் சூட்டப்படும். அதனால் பெயரை மாற்றுவதில் எந்த பயனும் இல்லை.
இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.
Related Tags :
Next Story