காதலியுடன் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டியதால் செஸ்காம் ஊழியர் தற்கொலை


காதலியுடன் நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டியதால் செஸ்காம் ஊழியர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Aug 2021 2:23 AM IST (Updated: 15 Aug 2021 2:23 AM IST)
t-max-icont-min-icon

காதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதால், செஸ்காம் ஊழியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக 4 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு:

காதலியுடன் நெருக்கமாக....

  சிவமொக்காவை சேர்ந்தவர் சுப்ரீத்(வயது 32). இவர் ஹாசன் மாவட்டம் அரிசிகெரேயில் உள்ள செஸ்காம் அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்ரீத்தும், அவரது காதலியும் அரிசிகெரே அருகே உள்ள துலே மல்லேஸ்வரா மலைக்கு சென்று உள்ளனர். அங்கு சுப்ரீத் தனது காதலியுடன் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது.

  இதனை மலையில் கூடாரம் அமைத்து தங்கியுள்ள 4 சிறுவர்கள் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளனர். பின்னர் சுப்ரீத்தை தொடர்பு கொண்டு பேசிய 4 சிறுவர்களும் காதலியுடன் நெருக்கமாக இருந்த வீடியோ எங்களிடம் உள்ளது. அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டி உள்ளனர்.

விஷம் குடித்து தற்கொலை

  இதனால் பயந்து போன சுப்ரீத், சிறுவர்கள் கேட்கும் போது எல்லாம் பணம் கொடுத்து வந்து உள்ளார். ஆனாலும் சிறுவர்கள் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதுடன், காதலியின் செல்போன் எண்ணை தரும்படி கேட்டு சுப்ரீத்துக்கு தொல்லை கொடுத்து உள்ளனர். இதனால் மனம் உடைந்த சுப்ரீத் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

  அதன்படி பெங்களூருவுக்கு வந்த சுப்ரீத் மெஜஸ்டிக் அருகே ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கினார். அந்த விடுதியில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்த உப்பார்பேட்டை போலீசார் விடுதிக்கு சென்று சுப்ரீத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் சுப்ரீத் எழுதிய ஒரு கடிதம் போலீசாரிடம் கிடைத்தது.

சிறுவர்கள் கைது

  அதில் எனது காதலியுடன் நெருக்கமாக இருந்த காட்சிகளை வீடியோ எடுத்து கொண்டு 4 சிறுவர்கள் மிரட்டியதாகவும், இதனால் தான் தற்கொலை செய்ய போவதாகவும் எழுதி இருந்தார். மேலும் கடிதத்தில் தன்னை மிரட்டிய சிறுவர்களின் பெயர்களையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். 

அந்த கடிதத்தை போலீசார் எடுத்து கொண்டனர். பின்னர் சம்பவம் குறித்து உப்பார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஹாசனுக்கு சென்று 4 சிறுவர்களையும் கைது செய்தனர். அவர்களை பெங்களூரு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story