ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் தற்கொலை


ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 15 Aug 2021 3:03 AM IST (Updated: 15 Aug 2021 3:03 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
இந்த சம்பவங்கள் குறித்த விவரம் வருமாறு:-
சப்-இன்ஸ்பெக்டர்
மண்டைக்காடு அருகே பருத்திவிளையை சேர்ந்தவர் ராஜா ரவி (வயது 61), ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவர் சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு நெய்யூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ராஜா ரவி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டதாரி வாலிபர்
திருவட்டார் அடுத்த கண்ணனூர் நுள்ளிக்காட்டுவிளையை சேர்ந்த மணி மகன் அலோசியஸ் (32), பி.ஏ. பி.எட். பட்டதாரி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவர் படிப்புக்கு ஏற்ற வேலை தேடி வந்தார். ஆனால் தகுந்த வேலை கிடைக்காததால் மனவருத்தத்தில் இருந்து வந்தார்.  
இந்தநிைலயில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. நேற்று காலை வீட்டின் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்தில் ஒரு மரத்தில் அலோசியஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார்.  
இதுகுறித்து திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
பெயிண்டர்
மணவாளக்குறிச்சி அருகே திருநயினார் குறிச்சி பிடாகையை சேர்ந்தவர் மகேஷ்குமார் (36), பெயிண்டர். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும், 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். மகேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு எனத்தெரிகிறது. நேற்று முன்தினம் அவர் மது போதையில் வீட்டிற்கு வந்தார். இதை உறவினர்கள் கண்டித்தனர். இதனால்  மனமுடைந்த மகேஷ்குமார் இரவு தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 
இதுகுறித்த புகாரின்பேரில் மணவாளக்குறிச்சி போலீசார்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story