ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கணவன், மனைவியிடம் ரூ.12 லட்சம் மோசடி தலைமை ஆசிரியர் கைது


ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கணவன், மனைவியிடம் ரூ.12 லட்சம் மோசடி தலைமை ஆசிரியர் கைது
x
தினத்தந்தி 15 Aug 2021 1:42 PM IST (Updated: 15 Aug 2021 1:42 PM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கணவன், மனைவியிடம் ரூ.12 லட்சம் மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமாஞ்சேரி பேட்டை அண்ணா தெருவை சேர்ந்தவர் நித்தியானந்தம் (வயது 32). இவரது மனைவி தேவிகா (30). கணவன், மனைவி இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலையில் சேர முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

இது குறித்து அறிந்ததும் திருவாலங்காடு ஒன்றியம் கோபால கிருஷ்ணாபுரம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் திருவள்ளூரை அடுத்த திருத்தணி அமிர்தபுரம் பஜார் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (52), திருத்தணி கெங்குசாமி மெட்ரிக் பள்ளியில் தற்காலிக துணை முதல்வராக இருக்கும் திருத்தணி சுப்பிரமணிய நகர், பாரதிதாசனார் தெருவை சேர்ந்த வெங்கடேசன், திருவள்ளூரை அடுத்த ஆர்.கே.பேட்டை சராத்தூர் காலனி செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த சிறுகும்மி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் அருள் ஆகியோர் கணவன், மனைவியை நாடி நாங்கள் கல்வித்துறையில் பெரிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம்.

எனவே உங்களுக்கு அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறினார்கள்.

தலைமறைவு

மேலும் ஆசிரியர் பணி கிடைக்க வேண்டுமானால் ரூ.12 லட்சம் தரவேண்டும் என கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து நித்தியானந்தம் கடந்த 2019-ம் ஆண்டு அவர்கள் கூறியதுபோல் ரூ.12 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மேற்கண்ட 3 பேரும் ஒரு போலியான பணி நியமன ஆணையை தயாரித்து அதனை உண்மையானது போல் காட்டி நித்தியானந்தத்திடம் கொடுத்துள்ளனர். அதை வாங்கி பணிக்கு செல்ல முயன்றபோது, அது போலியானது என்பதை தெரிந்து கொண்டனர்.

பின்னர் கணவன், மனைவி இருவரும் இது சம்பந்தமாக மேற்கண்ட 3 பேரையும் கேட்டபோது அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.

கைது

இதனால் பாதிக்கப்பட்ட தேவிகா அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமாரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார், சூரியகுமார், வாசுதேவன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று திருத்தணி அருகே பதுங்கியிருந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியரான வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை திருத்தணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கெங்குசாமி மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் வெங்கடேசன் மற்றும் சிறுகும்மி அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் அருள் ஆகியோரையும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Next Story