சுதந்திர தின விழா கொண்டாட்டம்
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
திருப்பூர்
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
சுதந்திர தின விழா
திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் நேற்று காலை திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. காலை 9.05 மணிக்கு கலெக்டர் வினீத் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களையும், மூவர்ண பலூன்களையும் பறக்கவிட்டார். கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. போலீஸ் ஆணையரக அலுவலகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், தீயணைப்பு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை, குடும்ப நலத்துறை, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, பள்ளி கல்வித்துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை, தன்னார்வலர்கள் என மொத்தம் 175 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் நினைவுபரிசுகளை கலெக்டர் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு மூன்று சக்கர சைக்கிள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஒருவருக்கு டிராக்டர், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, வருவாய்த்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மகளிர் திட்டம், மாவட்ட தொழில் மையம், தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை சார்பில் மொத்தம் 213 பேருக்கு ரூ.7 கோடியே 27 லட்சத்து 5 ஆயிரத்து 718 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க தேர்வு செய்யப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 15 பேருக்கு மட்டும் ரூ.4 கோடியே 45 லட்சத்து 74 ஆயிரத்து 605 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
விழாவில் பங்கேற்ற அதிகாரிகளுக்கும் கலெக்டர் நினைவுப்பரிசுகளை வழங்கினார்.
விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்வர்ணம் ஜெ.நடராஜன், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், தாராபுரம் சப்கலெக்டர் ஆனந்த் மோகன், மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி, மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் அரவிந்த், ரவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர்பொது சாகுல் அமீது, ஆர்.டி.ஓ.க்கள் ஜெகநாதன் கீதா முதன்மை கல்வி அதிகாரி ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா பரவல் காரணமாக மாணவமாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறவில்லை. அதுபோல் விழாவில் பொதுமக்கள் பங்கேற்கவும் அனுமதிக்கப்படவில்லை.
======================
Related Tags :
Next Story