கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 146 பேருக்கு பாராட்டு சான்றிதழ் சுதந்திர தின விழாவில் கலெக்டர் வழங்கினார்


கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 146 பேருக்கு பாராட்டு சான்றிதழ் சுதந்திர தின விழாவில் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 15 Aug 2021 8:40 PM IST (Updated: 15 Aug 2021 8:40 PM IST)
t-max-icont-min-icon

தேனியில் நடந்த சுதந்திர தின விழாவில், கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட 146 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.


தேனி:

தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் போலீசார், தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினரின் அணிவகுப்பு மரியாதையை திறந்த ஜீப்பில் நின்றபடி கலெக்டர் முரளிதரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே ஆகியோர் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மூவர்ண பலூன்களை கலெக்டர் பறக்கவிட்டார்.
பாராட்டு சான்றிதழ்
அதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்ட மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, போலீஸ் துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 146 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கி பாராட்டினார். 
இதையடுத்து தமிழ்நாடு முதல்-அமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிறப்பாக பணிபுரிந்ததற்காக தேனி கிருஷ்ணம்மாள் நினைவு மருத்துவமனைக்கு சிறந்த மருத்துவமனை விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை நிர்வாக அலுவலர் கே.ராமச்சந்திரன், டாக்டர் சி.மலரவன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் தேனியில் சுதந்திர போராட்ட தியாகியின் வீட்டுக்கு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் நேரில் சென்று அவருடைய வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். அதுபோல், மாவட்டம் முழுவதும் உள்ள தியாகிகளின் வீடுகளுக்கு அந்தந்த பகுதிகளை சேர்ந்த தாசில்தார்கள் நேரில் சென்று கவுரவித்தனர்.
வழக்கமாக சுதந்திர தின விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. எளிமையாக விழா நடத்தப்பட்டது. அதுபோல், சுதந்திர தின கிராமசபை கூட்டங்களும் நடத்தப்படவில்லை.


Next Story