கிருஷ்ணகிரியில் சுதந்திர தின விழா: கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தேசிய கொடி ஏற்றினார்
கிருஷ்ணகிரியில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தேசிய கொடியை ஏற்றினார்.
கிருஷ்ணகிரி:
சுதந்திர தின விழா
கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஏற்று கொண்டார். சமாதான புறாக்கள், மூவர்ண பலூன்களை பறக்க விட்டார். கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு துறை அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி வழங்கினார்.
210 பேருக்கு பாராட்டு சான்றிதழ்
தொடர்ந்து காவல் துறை, வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை, வேளாண்மை, சுகாதாரம், உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த 210 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியை தொடர்ந்து காவேரிப்பட்டணம் ஒன்றியம் மலையாண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி மறைந்த சின்னசாமியின் மனைவி வள்ளியம்மாள் வீட்டிற்கு கலெக்டர் நேரில் சென்று சால்வை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.
இதே போல கிருஷ்ணகிரி, போச்சம்பள்ளி, சூளகிரி, ஊத்தங்கரை, தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் ஆகிய தாலுகாக்களில் உள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் இல்லங்களுக்கு தாசில்தார்கள், வருவாய் துறை அலுவலர்கள் நேரில் சென்று சால்வை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி கவுரவித்தார்கள்.
கலை நிகழ்ச்சிகள்
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், மாவட்ட வன அலுவலர் பிரபு, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மலர்விழி, கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அசோகன், இணை இயக்குனர் (நலப்பணிகள்) பரமசிவன், துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) கோவிந்தன், மற்றும் அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு நேற்றைய விழா எளிமையாக நடைபெற்றது. கலை நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.
Related Tags :
Next Story