சுதந்திர தின விழாவில் கலெக்டர் மோகன் தேசிய கொடி ஏற்றினார்


சுதந்திர தின விழாவில் கலெக்டர் மோகன் தேசிய கொடி ஏற்றினார்
x
தினத்தந்தி 15 Aug 2021 9:45 PM IST (Updated: 15 Aug 2021 9:45 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் மோகன் தேசிய கொடி ஏற்றினார். பின்னர் கொரோனா நோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய 223 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கினார்.

விழுப்புரம், 

இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இவ்விழா ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படும்.
ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மூத்த குடிமக்களின்றி சுதந்திர தின விழாவை எளிமையாகவும், சமூக இடைவெளியை பின்பற்றியும் கொண்டாடப்பட்டது.

கலெக்டர் கொடியேற்றினார்

அதன்படி விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நேற்று காலை சுதந்திர தின விழா நடைபெற்றது. இதையொட்டி விழா மைதானத்திற்கு காலை 9 மணிக்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன் வருகை தந்தார். அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா வரவேற்றார்.
சரியாக 9.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அமைதியை வலியுறுத்தும் வகையில் வெண் புறாக்களையும், வண்ண, வண்ண பலூன்களையும் வானில் கலெக்டர், பறக்க விட்டார். அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் டி.மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவுடன் திறந்த ஜீப்பில் சென்று காவல்துறையினர், வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், ஊர்காவல் படையினர் ஆகியோரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

223 பேருக்கு நற்சான்றிதழ்

அதன் பிறகு கொரோனா நோய் தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவத்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த  223 பேருக்கு நற்சான்றிதழை மாவட்ட கலெக்டர் டி.மோகன் வழங்கினார்.
அதனை தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஏழை, எளிய மக்கள் 331 பேருக்கு ரூ.1 கோடியே 67 லட்சத்து 91 ஆயிரத்து 311 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இவற்றில் 17 பேருக்கு மட்டும் விழா மேடையில் மாவட்ட கலெக்டர் டி.மோகன் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மற்ற அனைவருக்கும் அந்தந்த துறை அதிகாரிகளால் நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதுபோல் கடந்த மாதம் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கீழே கிடந்த 10 பவுன் நகையை எடுத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்த டீ மாஸ்டர் விஜயகுமாரின் நேர்மையை பாராட்டி அவருக்கு மாவட்ட கலெக்டர் டி.மோகன், வீட்டுமனைப்பட்டா வழங்கினார். தொடர்ந்து, நாட்டுப்பண்ணுடன் விழா முடிவடைந்தது.

கலந்து கொண்டவர்கள்

இவ்விழாவில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காஞ்சனா, விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் குந்தவிதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, விழுப்புரம் கோட்டாட்சியர் ஹரிதாஸ், உதவி கலெக்டர் (பயிற்சி) ரூபினா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் பெருமாள், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஜோதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தணிகைவேல், விழுப்புரம் தாசில்தார் வெங்கடசுப்பிரமணியன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பழனிச்சாமி, ரவீந்திரன், ஊர்காவல் படை மண்டல தளபதி ரகுநாதன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story