கள்ளக்குறிச்சியில் சுதந்திர தினவிழா கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடி ஏற்றினார்
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சுதந்திரதின விழாவில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடியை ஏற்றி வைத்து 69 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்
கள்ளக்குறிச்சி
சுதந்திரதின விழா
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல் ஹக் முன்னிலையில் கலெக்டர் ஸ்ரீதர் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தேசிய கொடியின் மூவர்ண பலூன்களை பறக்க விட்ட கலெக்டர் உலக சமாதானத்தை பறைசாற்றும் விதமாக வெண் புறாக்களை பறக்க விட்டார். பின்னர் திறந்தவெளி ஜீப்பில் சென்று பார்வையிட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து முன்னாள் படைவீரர் நலத்துறை, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, சமூக நல மகளிர் உரிமைத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையின் சார்பில் 69 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சத்து 38 ஆயிரத்து 465 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 158 அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழையும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் தேசிய அளவில் பதக்கம் பெற்ற 2 மாற்றுத்திறனாளிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களையும், சுதந்திர தின விழா அணிவகுப்பில் பங்கு பெற்ற போலீசாருக்கு கேடயங்களையும் கலெக்டர் ஸ்ரீதர் வழங்கி பாராட்டினார்.
எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
மேலும் மாவட்ட வருவாய் அலுவலர் விஜய்பாபு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சுரேஷ், ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட திட்ட இயக்குனர் மணி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் (பொறுப்பு) சரவணன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா, துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, நகராட்சி ஆணையர் குமரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுப்புராயலு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story