வேலூரில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் நடந்த 75-வது சுதந்திர தினவிழாவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தேசிய கொடி ஏற்றி 16 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
வேலூர்
சுதந்திர தினவிழா
நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. வேலூர் நேதாஜி விளையாட்டு அரங்கில் நடந்த சுதந்திர தினவிழாவில் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் கலந்து கொண்டு காலை 9 மணியளவில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெள்ளை புறாக்களை பறக்க விட்டார்.
அதைத்தொடர்ந்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதை நடந்தது. அதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று பார்வையிட்டு ஏற்று கொண்டனர். இதையடுத்து கலெக்டர் வேலூர் மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரியும் 21 போலீசாருக்கு கேடயம் வழங்கி பாராட்டினார்.
நலத்திட்ட உதவிகள்
அதைத்தொடர்ந்து கொரோனா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளர்கள், வருவாய்துறை, மாநகராட்சி, பொதுப்பணித்துறை உள்பட பல்வேறு அரசுதுறைகளை சேர்ந்த 76 பேருக்கு கேடயம், பாராட்டு சான்றிதழையும், பல்வேறு துறைகளின் சார்பில் 16 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 44 லட்சத்து 23 ஆயிரத்து ஆயிரத்து 476 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார்.
சுதந்திர போராட்ட தியாகிகளின் வீட்டிற்கு அரசு அலுவலர்கள் நேரில் சென்று அரசு மரியாதை செலுத்தி கவுரவித்தனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக விழாவில் பங்கேற்க பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அதேபோன்று பள்ளி மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை.
விழாவில், வேலூர் சரக டி.ஐ.ஜி.பாபு, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா, உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன், வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி அலுவலகம்
முன்னதாக கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வேலூர் கோட்டையில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார்.
அதேபோல் வேலூர் மாநகராட்சியில் நடந்த சுதந்திர தினவிழாவிற்கு மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தலைமை தாங்கினார். உதவிகமிஷனர்கள் மதிவாணன், செந்தில், பிரபுகுமார் ஜோசப், பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயற்பொறியாளர் கண்ணன் வரவேற்றார். இதில், சிறப்பு அழைப்பாளராக ப.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இதேபோன்று மத்திய தொல்லியல்துறை சார்பில் முதன் முறையாக வேலூர் கோட்டை பூங்காவில் சுதந்திர தினவிழா நடைபெற்றது. தொல்லியல்துறை முதுநிலை பராமரிப்பு அலுவலர் வரதராஜ்சுரேஷ் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றினார். இதில், உதவி தொல்லியல்துறை அலுவலர் (ரசாயனம்) ரம்யாராஜ் மற்றும் ஊழியர்கள் கலந்து பலர் கொண்டனர்.
---
Related Tags :
Next Story