விராலிமலை அருகே செல்போன் கோபுரத்தில் தேசிய கொடியுடன் ஏறி மாற்றுத்திறனாளி போராட்டம்


விராலிமலை அருகே  செல்போன் கோபுரத்தில் தேசிய கொடியுடன் ஏறி மாற்றுத்திறனாளி போராட்டம்
x
தினத்தந்தி 16 Aug 2021 12:04 AM IST (Updated: 16 Aug 2021 12:04 AM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே செல்போன் கோபுரத்தின் மீது தேசிய கொடியுடன் ஏறி மாற்றுத்திறனாளி போராட்டத்தில் ஈடுபட்டார்.

விராலிமலை:
செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா, கொடும்பாளூரை சேர்ந்தவர் கருத்தகண்ணு. இவரது மகன் ஆறுமுகம் என்ற ஆரப்பன் (வயது 32). மாற்றுத்திறனாளியான இவர், அதிக விபத்துகள் ஏற்படக்கூடிய கொடும்பாளூர் சத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைத்திட வேண்டும்.
கருப்பு பணத்தை மீட்டெடுக்க வேண்டும். கடன் வாங்காத எனக்கு ரூ.2 லட்சம் கடன் வந்தது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அதிகாலை தேசிய கொடியுடன் கொடும்பாளூர் சத்திரம் அருகே உள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பேச்சுவார்த்தையில் உடன்பாடு
இதுகுறித்து தகவலறிந்த விராலிமலை தாசில்தார் சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆரப்பனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து செல்போன் கோபுரத்திலிருந்து கீழே இறங்கி வந்த அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.  
 இதைத்தொடர்ந்து ஆரப்பன், தாசில்தாரிடம் தான் கொடுத்த கோரிக்கை மனு குறித்து கேட்டபோது, அவர் கோரிக்கை மனுக்கான கோப்புகள் உயர் அதிகாரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறியதையடுத்து ஆரப்பன் அங்கிருந்து சென்றார்.
கோரிக்கை 
இந்த தனியார் செல்போன் கோபுரத்தில் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெற்றும், இதுவரை அந்த செல்போன் கோபுரத்தை சுற்றிலும் அதன் நிர்வாகம் வேலி அமைக்காமலும், அங்கு காவலர் பணியில் இல்லாமல் இருப்பதுமே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த தனியார் செல்போன் கோபுர நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story