பேரூராட்சிகளில் சிறிய அளவிலான உழவர்சந்தைக்கு விவசாயிகள் வரவேற்பு
வேளாண் பட்ஜெட்டில் பேரூராட்சிகளில் சிறிய அளவிலான உழவர்சந்தைக்கு விவசாயிகள் வரவேற்றுள்ளனர்.
விருதுநகர்,
தமிழக சட்டசபை வரலாற்றில் முதன் முதலில் வேளாண் பட்ஜெட் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறைக்கு என நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து விவசாயிகள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
நாராயணசாமி
தமிழ் விவசாய சங்க மாநில தலைவர் நாராயணசாமி கூறியதாவது:-
தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் வரவேற்கத்தக்து என்றாலும், இந்த பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நேரடியாக பலன் கிடைக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை. கிராமப்புறங்களில் குழுக்கள் அமைத்து அதன் மூலம் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட குழுக்களில் உள்ள உறுப்பினர்களை தவிர விவசாயிகள் பயன் பெற வாய்ப்பில்லாமல் போய்விடும். கடந்த ஆட்சிக்காலத்தில் விவசாயிகளுக்கு நகை கடன் தள்ளுபடி ரசீது வழங்கப்பட்டுள்ளதே தவிர நகைகள் திருப்பித் தரப்படவில்லை. நகைகளை திருப்பித்தர இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு ஏதும் இடம்பெறவில்லை.
கணேஷ்குமார்
ஆலங்குளம் அருகே உள்ள அப்பையநாயக்கர்பட்டியை சேர்ந்த விவசாயி கணேஷ் குமார் கூறியதாவது:-
வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர், இந்தநிலையில் பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. அதேபோல தற்போது பட்ெஜட்டில் தமிழக அரசு கொண்டுவந்துள்ள பயிர் காப்பீட்டு திட்டத்தால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். பேரூராட்சிகளில் சிறிய அளவிலான உழவர்சந்தை திட்டத்தை வரவேற்கிறோம்.
முத்துராமலிங்கம் - அல்லாளப்பேரி
தமிழக பட்ஜெட்டில் பனை மரங்களை வெட்டி அழிக்கக் கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கதக்கதாகும். அல்லாளப்பேரி கிராமத்தில் ஏராளமான பனை மரங்கள் இருந்தன. இந்த பனை மரங்களில் இருந்து கிடைக்கும் ஓலைகளை வைத்து பெட்டி செய்து பயன்படுத்தி வந்தனர். தற்போது பனை மரங்களை வெட்டப்பட்டு வருகிறது. இதனால் பனை மரங்கள் முற்றிலும் அழிந்து போகுமோ என்ற அச்சத்தில் இருந்தோம். இ்ந்த வேளையில் இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
ராமச்சந்திர ராஜா
தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமச்சந்திர ராஜா கூறுகையில், தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் நல்ல அம்சங்கள் இருந்தாலும் நெல், கரும்பு கொள்முதல் விலை தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி உயர்த்தி தரப்படவில்லை. கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுப்பது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. சிறுதானியங்கள் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தாலும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இருப்பினும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி மு.க.ஸ்டாலின் நிைறவேற்றி தருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.
வத்திராயிருப்பு பிரகலாதன்
வத்திராயிருப்பு பகுதியில் நெல், தென்னை, மா போன்ற விவசாய பணியினை மேற்கொண்டு வருகிறேன். தமிழக அரசு அறிவித்துள்ள வேளாண் பட்ஜெட் தாக்கல் விவசாயிகளுக்கு திருப்தியாக அமையவில்லை. பழைய நடைமுறை படி தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நெல் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.2,100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு போதுமானதாக இருக்காது. நெல் குவிண்டாலுக்கு ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். .டீசல் விலை உயர்வினால் உழவு எந்திரம் வைத்துள்ள விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். விவசாயிகளின் நலன் கருதி மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்.
மனோகரன் - பாளையம்பட்டி
அருப்புக்கோட்டை பகுதியில் மானாவாரி நிலங்களில் எண்ணற்ற விவசாயிகள் சாகுபடி செய்து வாழ்ந்து வருகிறோம். எங்கள் பகுதி கடும் வறட்சியான பகுதி. மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செய்ய முடியும். இந்நிலையில் மானாவாரி விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு அதிக அளவில் நிதியை ஒதுக்கி உள்ளது. இது எங்களையும் எங்களது விவசாய குடும்பத்தினரையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
குருசாமி
சாத்தூரை அடுத்த பா. லட்சுமியாபுரத்தை சேர்ந்த குருசாமி கூறுகையில்,
விவசாயிகளுக்கான எண்ணற்ற திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரவேற்கத்தக்கது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகளில் சிறிய அளவிலான உழவர்சந்தை, நவீன வசதிகளுடன் உழவர்சந்தையை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களினால் விவசாயிகளும் கூடுதலான பலன் கிடைக்கும்.
Related Tags :
Next Story