போலீஸ் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு தர்ணா


போலீஸ் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு தர்ணா
x
தினத்தந்தி 16 Aug 2021 1:44 AM IST (Updated: 16 Aug 2021 1:44 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டத்தில் போலீஸ் நிலையத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெயங்கொண்டம்:

கொடியை அகற்ற வலியுறுத்தல்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பா.ஜ.க. சார்பில் சுதந்திர தின விழா, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் அய்யப்பன் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
இந்நிலையில் ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் அங்கு சென்று, பா.ஜ.க. கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி கட்டி இருக்கக்கூடாது, உடனடியாக அதனை இறக்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகவும், தவறும்பட்சத்தில் பிடுங்கி எறிந்து விடுவதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதற்கு பா.ஜ.க.வினர் கண்டனம் தெரிவித்து மறுத்ததாகவும், ஆனால் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து வலியுறுத்தி கொடியை கீழே இறக்கி விட்டதாகவும் தெரிகிறது.
முற்றுகை
இதையடுத்து தேசிய கொடியை அவமதித்ததாக கூறி ஜெயங்கொண்டம் போலீசாரை கண்டித்து, மாவட்ட தலைவர் அய்யப்பன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பா.ஜ.க.வினர் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பிருந்து ஊர்வலமாக சென்று போலீஸ் நிலையம் முன்பு திடீரென முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஒன்றிய தலைவர்கள் அரங்கநாதன், நீலமேகம், தனபால், நகர தலைவர் ராமர் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
அவர்களிடம், இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. மேலும், காந்தி பூங்கா முன்பு காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கட்சி கொடி கம்பத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளனர். அவ்வாறு உள்ளபோது நாங்கள் ஏற்றியதில் என்ன தவறு, எங்களது கொடியை மட்டும் அகற்ற கூறியதன் அவசியம் என்ன? என்று பா.ஜ.க.வினர் கேள்வி எழுப்பினர். அதற்கு போலீசார், அவர்கள் மீதும் வழக்கு பதியப்படும் என்று தெரிவித்தனர்.
துறைரீதியாக நடவடிக்கை எடுக்க...
இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்த நிலையில், ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைகதிரவன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கோரிக்கை வைத்து, புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட துணை சூப்பிரண்டு, மேலதிகாரிகளிடம் கலந்தாலோசித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து பா.ஜ.க.வினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய போலீஸ் நிலையம் முன்பு போலீஸ் வேன்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story