இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை
பணகுடி அருகே இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.
பணகுடி:
பணகுடி அருகே பட்டப்பகலில் இளம்பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
கணவன்-மனைவி
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் ராமச்சந்திரன் என்ற சந்துரு (வயது 29). கூலித்தொழிலாளி. இவருக்கும், நெல்லை மாவட்டம் திசையன்விளை செல்வமருதூரைச் சேர்ந்த முருகன் மகள் மலர்க்கொடிக்கும் (28) கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் வடக்கன்குளத்தில் வசித்து வந்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மலர்க்கொடி தனது குழந்தைகளுடன் தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். ராமச்சந்திரன் தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்தும் அவர் வரவில்லை.
கழுத்தை நெரித்துக் கொலை
இந்த நிலையில் மலர்க்கொடிக்கும், ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மலர்க்கொடி தனது குழந்தைகளுடன் பணகுடி அருேக உள்ள கலந்தபனையில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். அந்த வீட்டிற்கும் அந்த வாலிபர் வந்து சென்றதாக தெரிகிறது. இதை அறிந்த ராமச்சந்திரன் நேற்று மதியம் கலந்தபனைக்கு வந்தார்.
அப்போது, மலர்க்கொடிக்கும், ராமச்சந்திரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன், மலர்க்கொடியை கழுத்தை நெரித்ததாக கூறப்படுகிறது. இதில் மலர்க்கொடி பரிதாபமாக இறந்தார். பின்னர் ராமச்சந்திரன் பணகுடி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.
பரபரப்பு
பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தார். மேலும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மலர்க்கொடி உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பணகுடி அருகே பட்டப்பகலில் இளம்பெண்ணை கணவரே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story