75-வது சுதந்திர தினவிழா; நெல்லையில் கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றினார்
சுதந்திர தினவிழாவையொட்டி நெல்லையில் கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றினார்.
நெல்லை:
நெல்லையில் நடந்த 75-வது சுதந்திர தின விழாவில் கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றினார்.
சுதந்திர தின விழா
இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. காலை 9.10 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பை பார்வையிட்டார். அப்போது நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உடன் சென்றார்.
பின்னர் போலீசார், தீயணைப்படையினர், ஊர்க்காவல் படையினர் அணிவகுப்பு மரியாதை நடந்தது.
நலத்திட்ட உதவிகள்
இதைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை கலெக்டர் விஷ்ணு வழங்கினார். பத்தமடை பேரூராட்சியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த முத்துராமலிங்கம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தார். அவருடைய குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் அறிவித்த ரூ.25 லட்சத்திற்கான காசோலையை அவருடைய குடும்பத்தினருக்கு கலெக்டர் வழங்கினார்.
மேலும் பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரம், தேய்ப்புபெட்டிகள், மரம் ஏறும் கருவி, உதவித்தொகை என 18 பேருக்கு ரூ.35 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து போலீசாரின் யோகா கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
3 அடுக்கு பாதுகாப்பு
விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், உதவி கலெக்டர்கள் சிவகிருஷ்ணமூர்த்தி (சேரன்மாதேவி), மூர்த்தி (நெல்லை), மாநகராட்சி ஆணையாளர் விஷ்ணு சந்திரன், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, பேரூராட்சி உதவி இயக்குனர் குற்றாலிங்கம், பேரூராட்சிகளின் மண்டல அலுவலக செயல் அலுவலர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளை சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் கணேசன், ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். சுதந்திர தின விழாவையொட்டி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
மாநகராட்சி அலுவலகம்
நெல்லை மாநகராட்சி சார்பில் நடந்த சுதந்திர தின விழாவுக்கு ஆணையாளர் விஷ்ணுசந்திரன் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி பணியாளர்களுக்கு பாராட்டு சான்றுகள், தூய்மை பணியாளர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி செயற்பொறியாளர்கள் பாஸ்கர், நாராயணன், உதவி ஆணையாளர்கள் வெங்கட்ராமன், சொர்ணலதா, அய்யப்பன், உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வருங்கால வைப்புநிதி அலுவலகம்
நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள 100 அடி உயரமுள்ள தேசிய கொடிகம்பத்தில் ரெயில் நிலைய மேலாளர் முருகேசன் தேசிய கொடியேற்றினார். அதிகாரிகள் சித்திரபுத்திரன், சுப்பையா, பொறியாளர்கள் கோபால் ராமன், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெல்லை மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் ஆணையாளர் கணேஷ்குமார் ஜானி தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. துணை ஆணையாளர் சுதர்சன் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் பகுதியில் உள்ள நெல்லை கோட்ட அரசு போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் ராஜேஸ்வரன், நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள நெல்லை அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளர் அலுவலகத்தில் பொது மேலாளர் சரவணன் தேசியக் கொடி ஏற்றினர்.
காந்தி சிலை
நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் முன்பு மகாத்மா காந்தி சிலை உள்ளது. தற்போது பஞ்சாயத்து அலுவலகம் எடுக்கப்பட்டதால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
சுதந்திர தின விழாவையொட்டி காந்தி சிலைக்கு நெல்லை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் தூய்மைப்பணியாளர்கள் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
சுதந்திர தின விழாவையொட்டி நெல்லை மாநகர பகுதியில் உள்ள காந்தி, காமராஜர், வ.உ.சிதம்பரம்பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் அழகுமுத்துக்கோன் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Related Tags :
Next Story