கர்நாடகத்தில் 750 கிராம பஞ்சாயத்துகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்; பசவராஜ் பொம்மை அறிவிப்பு
75-வது சுதந்திர தின விழாவையொட்டி, 750 கிராம பஞ்சாயத்துகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
மந்திரிசபை ஒப்புதல்
கர்நாடக அரசு சார்பில் சுதந்திர தின விழா பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தேசிய கொடி ஏற்றி வைத்து பேசியதாவது:-
பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு வசதிகள் தவிர அரசின் திட்ட பயன்கள் கடைகோடியில் உள்ள மக்களுக்கும் போய் சென்றடைவதை உறுதி செய்ய எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை அர்த்தப்பூர்வமாகவும், சரியான முறையிலும் செலவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பழங்குடியினர் நலத்திற்காக தனி துறையை ஏற்படுத்த மந்திரிசபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தகுதியான நபர்கள்
இது கர்நாடகத்தில் வசிக்கும் 50 லட்சம் பழங்குடியின மக்களுக்கு உதவும். சந்தியா சுரக்ஷா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 39.98 லட்சம் பேர் பயன் அடைவார்கள். விதவைகளுக்கான உதவித்தொகை ரூ.600-ல் இருந்து ரூ.800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 17.25 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.
அதே போல் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.600-ல் இருந்து ரூ.800 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தகுதியான நபர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் தகுதியற்ற நபர்கள் ஓய்வூதியம் வாங்கினால் அதை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமூக விரோதிகள்
கொரோனா முதல் மற்றும் 2-வது அலையின்போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ.13 ஆயிரம் கோடி உதவித்தொகை வழங்கப்பட்டது. இது அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டவும், குற்றங்களை குறைக்கவும் முன்னுரிமை அளிக்கப்படும். கர்நாடகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் போதைப்பொருள் விற்பனைக்கு எதிரான அரசின் போர் மேலும் தீவிரம் அடையும்.
சமூக விரோதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுப்பதில் சமரசத்திற்கு இடமில்லை. சமூக விரோதிகளால் அமைதி சீர்குலைக்கப்படுகிறது. கர்நாடகத்தின் நிலம், நீர், மொழி, கலாசாரத்தை காக்க நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். சட்டப்படி நமக்கு கிடைக்க வேண்டிய நீரை பெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
750 கிராம பஞ்சாயத்துகள்
பத்ம விருதுகளுக்கு தகுதியானவர்கள் மத்திய அரசால் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். இந்த விஷயத்தில் பொதுமக்களின் கருத்துகளுக்கு பிரதமர் மோடி மதிப்பளிக்கிறார். புகழ், பெயர் எதிர்பார்க்காமல் சாதனை படைப்பவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இது மோடி பிரதமரான பிறகே சாத்தியமாகியுள்ளது. வளமான கர்நாடகத்தை உருவாக்குவதே எங்களின் முதன்மையான நோக்கம்.
பெங்களூரு மட்டும் வளர்ந்தால் போதாது. 2-வது நிலை நகரங்களும் வளர வேண்டும். மண்டல ஏற்றத்தாழ்வு சரிசெய்யப்பட வேண்டும். 75-வது சுதந்திர தின விழாவையொட்டி கர்நாடகத்தில் 750 கிராம பஞ்சாயத்துகள் மேம்படுத்தப்படும்.
சூரியசக்தி மின் உற்பத்தி
அங்கு தெரு விளக்குகள் அமைத்தல், ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு வழங்குதல், 100 சதவீத குப்பைகளை சேகரித்து அகற்றுதல், கழிவுநீரை அறிவியல் பூர்வமாக நிர்வகித்தல், சூரியசக்தி மின் உற்பத்தியை ஏற்படுத்துதல், பள்ளிகளில் டிஜிட்டல் நூலகம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படும். அந்த 750 கிராம பஞ்சாயத்துகளில் வீடுகள் இல்லாதோருக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
விவசாய உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தல், விளைபொருட்கள் உற்பத்தியை அதிகரித்தல் போன்ற நோக்கத்திற்காக அந்த 750 கிராம பஞ்சாயத்துகளிலும் அம்ரித் விவசாயிகள் உற்பத்தி அமைப்புகள் தொடங்கப்படும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
Related Tags :
Next Story