கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பால் கேன்களுடன் உற்பத்தியாளர்கள் திடீர் போராட்டம்
பால் கொள்முதல் செய்ய மறுத்ததால் ஆத்திரம் அடைந்த உற்பத்தியாளர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு பால் கேன்களுடன் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கள்ளக்குறிச்சி
கூட்டுறவு சங்கம்
கள்ளக்குறிச்சி அருகே தாகம் தீர்த்தாபுரம் கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது. இந்த சங்கத்தின் மூலம் அந்த பகுதியில் உள்ள சுமார் 280 உற்பத்தியாளர்களிடம் இருந்து தினமும் காலையில் 2 ஆயிரம் லிட்டர், மாலையில் 1,400 லிட்டர் பால் கொள்முதல் செய்து ஆவின் பால் குளிரூட்டும் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 15 நாட்களுக்கு ஒரு நாள் பால் கொள்முதல் செய்யப்படுவதில்லை. அன்றைய தினம் உற்பத்தியாளர்கள் தங்களிடம் உள்ள பாலை லிட்டர் ரூ.20-க்கு வெளிநபர்களிடம் விற்பனை செய்கின்றனர். வழக்கம் போல் நேற்று காலை 6 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் கேன்களில் சுமார் 2 ஆயிரம் லிட்டர் பாலை கூட்டுறவு சங்கத்துக்கு எடுத்து வந்தனர்.
கொள்முதல் செய்ய மறுப்பு
அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் இன்று(அதாவது நேற்று) பால் கொள்முதல் இல்லை என கூறினார்கள். இதனால் ஆத்திரமடைந்த பால் உற்பத்தியாளர்கள் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பால் கேன்களுடன் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பால் உற்பத்தியாளர் சங்கத்தில் தினமும் பால் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
பேச்சுவார்த்தை
ஒரு கட்டத்தில் கேன்களில் இருந்த பாலை கீழே கொட்ட முயன்றபோது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடோடி சென்று அவர்களை தடுத்து நிறுத்தினர். இதைத் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையில் சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலையத்திற்கு பாலை எடுத்துச் செல்லுமாறு கூறினார்கள்.
இதை அடுத்து போராட்டத்தை கைவிட்ட உற்பத்தியாளர்கள் கேன்களில் இருந்த பாலை சின்னசேலம் பால் குளிரூட்டும் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பால் கொள்முதல் செய்ய மறுத்தை கண்டித்து கலெக்டர் அலுவலகம் முன்பு பால்கேன்களுடன் உற்பத்தியாளர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story