திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் அதிகம் அளவில் குவிந்தனர்.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் அதிகம் அளவில் குவிந்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் அதிகம் அளவில் குவிந்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் தொலைபேசி மூலமாக புகார்களை தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அறிவித்தார். அதன்படி 0421 2969999, 97000 41114 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். கலெக்டர் வினீத் தொலைபேசி மூலமாக பொதுமக்கள் தெரிவித்த புகார்களை கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நேற்று 101 பேர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். அவினாசி தாலுகா பழங்கரை ஊராட்சியை சேர்ந்த தம்பதியினரின் குழந்தைகள் பாறைக்குழியில் விழுந்து இறந்ததற்காக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் காசோலையை தம்பதிக்கு கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி வாசுகி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இலவச வீட்டுமனைப்பட்டா
மேலும் கலெக்டர் அலுவலகத்துக்கு நேரில் வந்தும் பொதுமக்கள் அதிக அளவில் புகார் மனு கொடுத்தனர். குறிப்பாக இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு அதிகமானவர்கள் மனு கொடுத்தனர். பல்லடம் இச்சிப்பட்டி தேவராயன்பாளையம் அரசு காலனியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 75 குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். சொந்தமாக வீடு, நிலம் இல்லை. இச்சிப்பட்டி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தை தனியார் ஆக்கிரமித்து வைத்துள்ளார். அந்த நிலத்தை மீட்டு எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
திருப்பூர் தென்னம்பாளையம் முத்தையன் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். கூலி வேலை செய்து வரும் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
வடுகபாளையம்
திருப்பூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் சங்கத்தின் (சி.ஐ.டி.யு.) சார்பில் அளித்த மனுவில், ‘பல்லடம் வடுகபாளையம் கிராமத்தில் 5.30 ஏக்கர் நிலத்தில் கைத்தறி நெசவாளர்கள் 293 பேருக்கு பட்டா கொடுக்கப்பட்டது. அதில் 20-க்கும் மேற்பட்டவர்களுக்கு வீட்டுவரி ரசீது 2015-ம் ஆண்டு போடப்பட்டுள்ளது. பல கட்டங்களாக பிரித்து தனித்தனி பட்டா வழங்க கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த இடத்தில் கடன் பெற்று வீடு கட்ட வேண்டி உள்ளதால் பட்டாவை தனித்தனியாக பிரித்து தனிப்பட்டா வழங்கினால் மட்டுமே கடன் பெற முடியும். எனவே 293 பேருக்கு தனிப்பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
ஆதித்தமிழர் ஜனநாயக பேரவை தலைவர் பவுத்தன் தலைமையில் திருப்பூர் வடக்கு பகுதியில் உள்ள பத்மாவதிபுரம், காந்திநகர், ஏ.வி.பி.லே-அவுட், ஓடக்காடு, அங்கேரிப்பாளையத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டவர்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். அனைவரும் பனியன் தொழிலாளர்கள் ஆவார்கள். மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர்கள். எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
கொரோனா பரவும் அபாயம்
திருப்பூர் மாநகராட்சி 30-வது வார்டு குமாரசாமி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வீடு வழங்கி உதவ வேண்டும். விதவைச்சான்று பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த சான்று பெற காலதாமதம் ஆகிறது. எனவே எங்களுக்கு உரிய காலஅவகாசம் வழங்கி வீடு ஒதுக்கீடு செய்து உதவ வேண்டும்’ என்றுகூறியுள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் மனுக்களை கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்கு வர வேண்டாம். தொலைபேசி மூலமாக புகார் தெரிவிக்கலாம் என்று கலெக்டர் அறிவித்தார். இருப்பினும் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு நேற்று அதிக அளவில் மக்கள் மனு கொடுக்க குவிந்தனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story