பொங்கலூர் அருகே விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
பொங்கலூர் அருகே விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
திருப்பூர்,
பொங்கலூர் அருகே விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தண்ணீர் விற்பனை
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெறாவிட்டாலும், தொலைபேசி மக்கள் தங்கள் புகார் மனுக்களை அளித்து வருகிறார்கள். ஆனால் பலர் நேரடியாக வந்து மனு கொடுத்து வருகிறார்கள். பொங்கலூர் அருகே கண்டியன்கோவில் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘கண்டியன்கோவில், பூசாரிப்பாளையம், முதியாநெரிச்சல், அம்மாபாளையம், சின்னாரிப்பட்டி ஆகிய கிராமங்களில் கடந்த ஓராண்டுக்கு முன்பு விவசாய நிலங்களில் இருந்து முறைகேடாக தண்ணீர் எடுத்து சிலர் விற்பனை செய்து வந்தார்கள். இதன்காரணமாக எங்கள் கிராமங்களில் உள்ள விவசாய கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்தது.
இதனால் சின்னவெங்காய சாகுபடி, கால்நடைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை, தென்னை மரங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு நிலவியது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டதும் கடந்த ஓராண்டாக தண்ணீர் விற்பனை செய்வதை நிறுத்தி வைத்திருந்தனர். இந்தநிலையில் தற்போது மீண்டும் விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் விற்பனை செய்து வருகிறார்கள். இதன்காரணமாக எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
சுரங்கப்பாலம்
*பெருந்தொழுவு ஆண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் பாண்டீஸ்வர சுவாமி கோவிலுக்கு சொந்தமான பூமி 4 ஏக்கர் உள்ளது. இந்த பூமியில் தனியார் ஒருவர், கிரஷர் உரிமையாளருக்கு மண் அள்ளுவதற்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார் இதை தடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
*நாம் தமிழர் கட்சியின் கையூட்டு லஞ்ச ஒழிப்பு பாசறையினர் அளித்த மனுவில், ‘திருப்பூர் மாநகராட்சி வளர்மதி பஸ் நிறுத்தம் பகுதியில் எம்.ஜி.ஆர். சிலை அருகே சுரங்கப்பாலம் கட்டும் பணி பாதியிலேயே நிற்கிறது. 10 வருடத்துக்கும் மேலாக கிடப்பில் போடப்பட்ட இந்த பாலப்பணிகளை விரைந்து முடித்து மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
கூடுதல் நேரம் கடைகளை திறக்க அனுமதி
*திருப்பூர் வடக்கு ஒன்றிய அனைத்து வியாபாரிள் நல சங்க நிர்வாகிகள் அளித்த மனுவில், ‘பட்டம்பாளையம், சொக்கனூர், மேற்குபதி, வள்ளிபுரம், தொரவலூர், ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லூர், காளிபாளையம், கணக்கம்பாளையம், பொங்குபாளையம், இடுவாய், மங்கலம், முத்தனம்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் 500-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான கடைகள் உள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக மாலை 6 மணி வரை கடைகளை திறக்க கலெக்டர் அறிவித்தார். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வேலைக்கு சென்று விட்டு மாலையில் பொருட்களை வாங்க முடியாத நிலை உள்ளது. நேரக்கட்டுப்பாடு காரணமாக சிறு, குறு வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி பகுதியில் கொரோனா தொற்று மிகவும் குறைவாக உள்ளது. மேற்கண்ட ஊராட்சிகளில் கடைகளை மேலும் 2 மணி நேரம் கூடுதலாக திறக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
*மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கத்தினர் அளித்த மனுவில், ‘விவசாயிகள் கிராமங்களில் தங்கள் விவசாய பூமியில் வேலை செய்து விட்டு மாலையில் வீடு திரும்புவது வழக்கம். கறவை மாடுகள் வளர்ப்போர் தங்கள் வேலைகளை முடித்து விட்டு மாலை நேரத்தில் தேவையான மாட்டு தீவனங்கள், விவசாயத்துக்கு தேவையான உரங்கள் வாங்க கடைக்கு செல்வது வாடிக்கை. ஆனால் தற்போது 6 மணி வரை மட்டுமே கடைகள் இருப்பதால் விவசாயிகள் சிரமம் அடைகிறார்கள். எனவே மாட்டு தீவனம் மற்றும் உரம் விற்பனை செய்யும் கடைகளை இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
தோண்டப்பட்ட குழிகளால் விபத்து
*பொங்குபாளையம் ஊராட்சி பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘பொங்குபாளையம் கிராம நிர்வாக அதிகாரி தனது அலுவலகத்தில் எப்போதும் இருப்பது இல்லை. சான்றிதழ் பெற அலைக்கழித்து வருகிறார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
*சாமுண்டிபுரம் பகுதியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் குப்பை சரிவர அள்ளப்படாமல் உள்ளது. கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளது. 4-வது குடிநீர் திட்ட குழாய்கள் அமைக்க தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் விபத்து ஏற்படுகிறது. இதை சரி செய்ய வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.
Related Tags :
Next Story