திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அறியப்படாத சுற்றுலாத்தலங்கள் மற்றும் தொல்லியல் புராதனசின்னங்களை பிரபலபடுத்த திட்டம்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அறியப்படாத சுற்றுலாத்தலங்கள் மற்றும் தொல்லியல் புராதனசின்னங்களை பிரபலபடுத்த திட்டம்
உடுமலை,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அறியப்படாத சுற்றுலாத்தலங்கள் மற்றும் தொல்லியல் புராதனசின்னங்களை பிரபலபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி டி.அரவிந்தகுமார் தெரிவித்தார்.
சுற்றுலாத்தலங்கள்
திருப்பூர் மாவட்டத்தில் திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில், பஞ்சலிங்கம் அருவி, திருமூர்த்தி அணை, நீச்சல்குளம், அமராவதி அணை, முதலைப்பண்ணை, சின்னாறு சுற்றுலாத்தலம், உப்பாறு அணை,சிவன்மலை, அவினாசிலிங்கேஸ்வரர் கோவில், முருகநாதசுவாமி கோவில், ஊத்துக்குளி முருகன் கோவில், சுக்ரீஸ்வரர் கோவில், அழகு திருமலைராயப்பெருமாள் கோவில், கொண்டத்து காளியம்மன் கோவில் போன்ற பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்கள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான இடங்கள் அறியப்படாத இடங்களாகவும், சுற்றுலா தலங்களாகவும் உள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இதுபோன்ற இடங்கள் மற்றும் சுற்றுலாத்தலங்களின் பெருமையை மற்ற மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் அறியும் வண்ணம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதலங்களில் பிரபல படுத்தவும், திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்தலங்களின் வளர்ச்சியில், மாவட்ட சுற்றுலாத் துறையுடன் இணைந்து பல்வேறு சேவை புரியவும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா ஆர்வலர்களுக்கு கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி டி.அரவிந்தகுமார் தனது சமூக வலைத்தளமான முகநூல் கணக்கில் அழைப்பு விடுத்திருந்தார்.அவரின் அழைப்பை ஏற்று திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஒரே நாளில் 500க்கும்மேற்பட்ட சுற்றுலா ஆர்வலர்கள் இணைந்தனர்.
ஆலோசனை கூட்டம்
இதைத்தொடர்ந்து சுற்றுலா ஆர்வலர்களைக்கொண்டு முதல் ஆலோசனைக்கூட்டம் உடுமலை பசுபதி வீதியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி குறிப்பிட்ட சுற்றுலா ஆர்வலர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரி டி.அரவிந்தகுமார் தலைமை தாங்கி பேசினார்.அப்போது அவர் பேசியதாவது:-
தமிழ் நாட்டில் சுற்றுலா வளர்ச்சியில் திருப்பூர்மாவட்டத்தை முன்னிலைப்படுத்த திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி சிவன்மலை கோவிலுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க கருத்துரு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. திருமூர்த்தி அணைப்பகுதியில் பூங்கா அமைப்பதற்கும், அமராவதி அணைப்பகுதியில் உள்ள பூங்காவை மேம்படுத்துவதற்கும் பல்வேறு கருத்துருக்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. உடுமலையை சுற்றிலும் பல்வேறு சுற்றுலா தலங்கள் இருப்பதாலும், உடுமலை மையப்பகுதியாக உள்ளதாலும் உடுமலை நகரை சீர்மிகு நகரமாக மாற்ற, உடுமலை நகராட்சியுடன் இணைந்து ஸ்மார்ட் உடுமலை திட்டம் செயல்படுத்தவும் சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. இதேபோன்று திருப்பூர் மாவட்டத்தில் அறியப்படாத சுற்றுலாத்தலங்களை பிரபலப்படுத்தவும், பல்வேறு இடங்களில் காணப்படும் தொல்லியல் புராதன சின்னங்களை பிரபலபடுத்தவும் சுற்றுலாத்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கு சுற்றுலா ஆர்வலர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுற்றுலா வளர்ச்சிக்குழு
கூட்டத்தில் உடுமலை தேஜஸ் ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் எஸ்.எம்.நாகராஜ், அரசு கலைக்கல்லூரி சுற்றுலாத்துறை தலைவர் விஜய் ஆனந்த், சமூக ஆர்வலர் சத்யம் பாபு ஆகியோர் பேசினர். ஜவஹர், சண்முகம், பிரசாந்த், ராஜேஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சிக்குழு அமைக்கப்பட்டது. இதற்கு தனி சின்னம் (எம்ப்ளம்) கொண்டு வரவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Related Tags :
Next Story