சரியாக செயல்படாத ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். கலெக்டர் எச்சரிக்கை


சரியாக செயல்படாத ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 Aug 2021 10:29 PM IST (Updated: 16 Aug 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை மாவட்டத்தில் டெங்கு ரொசு ஒழிப்பு பணியில் சரியாக செயல்படாத ஒப்பந்த தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு, கொரோனா தடுப்பு மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கி பேசினார். 

அவர் பேசியதாவது:-

கட்டுப்படுத்த வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொய்வின்றி நடைபெற வேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் சுகாதார துறையினரால் கண்டறியப்படும் தொற்று பாதிப்பு நபர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் அப்பகுதிகளில் முழுமையாகப் பரிசோதனை செய்து பரவல் தொடர்வதை கட்டுப்படுத்த வேண்டும். 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்த வேண்டும். 

நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து நடத்தும் முகாம்களில் அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி செலுத்த வேண்டும். இப்பணிகளில் சுணக்கம் கண்டறியப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.

பணிநீக்கம் செய்யப்படுவார்கள்

மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8 லட்சத்திற்கு மேல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரையில் 3 லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாள்தோறும் 8,000 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் ஒரு சில இடங்களில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த வருடம் இதே மாதத்தில் 3 பேர் பாதிக்கப்பட்டனர். தற்போது 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே பாதிக்கப்பட்ட நபர்களின் குடியிருப்பு பகுதிகளில் கொசு ஒழிப்பு பணிகளை சரியாக செய்ய வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் அப்பகுதிகளில் கொசு ஒழிப்பு பணி, புகை அடிக்கும் பணிகளை செய்ய வேண்டும். கொசு ஒழிப்பு பணியாளர்கள் அனைவரும் முறையாக அவர்களுடைய பணிகளை செய்கிறார்களா? என சுகாதார அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். சரியாக பணிகளை செய்யாத ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்து, புதிய பணியாளர்களை நியமித்து டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க வேண்டும். 

இப்பணிகள் குறித்து அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆய்வின்போது கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிமாறன், வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு மருத்துவர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story