வேளாண் திட்டங்களை செயல்படுத்த கள ஆய்வு பணி நடைபெற்று வருகிறது கலெக்டர் ஸ்ரீதர் தகவல்


வேளாண் திட்டங்களை செயல்படுத்த கள ஆய்வு பணி நடைபெற்று வருகிறது  கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
x
தினத்தந்தி 16 Aug 2021 10:46 PM IST (Updated: 16 Aug 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு வேளாண் திட்டங்களை செயல்படுத்துவதற்காக கள ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்

கள்ளக்குறிச்சி

கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் கலெக்டர் ஸ்ரீதர் நேற்று காலை திடீர் ஆய்வு செய்தார். அப்போது காய்கறிகளின் விலை நிலவரம் மற்றும் தரமான காய்கறிகள் விற்பனை செய்யப்படுகிறதா?, உழவர் சந்தைக்கு தினமும் எத்தனை விவசாயிகள் காய்கறிகள் எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர் என ஆய்வு செய்தார். பின்னர் புதிதாக காய்கறி விற்பனை செய்வதற்கு 43 விவசாயிகளுக்கு  அடையாள அட்டைகளை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து கலெக்டர் ஸ்ரீதர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கள ஆய்வு பணி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேளாண்மை, வேளாண் பொறியியல், தோட்டக்கலை ஆகிய துறைகளின் திட்டங்களை செயல்படுத்திட பல்வேறு கள ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 
இதன் ஒரு பகுதியாக கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் உழவர் சந்தையில் காய்கறிகள் விற்பனை, விலை நிர்ணயம் செய்தல், விவசாயிகள் வருகை பதிவேடு, எடை எந்திரம் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

150 விவசாயிகள் வருகை

தினசரி சந்தைக்கு 100 முதல் 150 விவசாயிகள் காய்கறிகள், தேங்காய், கீரைகள், பழங்கள், பூக்கள், நாட்டுக்கோழி முட்டைகள், காளாண் ஆகியவற்றை நுகர்வோர்களிடம் நேரடியாக விற்பனை செய்து வருகிறார்கள். இதன் மூலம் தினமும் ஆயிரம் முதல் 1,500 நுகர்வோர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக வாங்கி பயன்பெறுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தஆய்வின்போது வேளாண்மை துணை இயக்குநர் உலகம்மை முருகக்கனி, நகராட்சி ஆணையர் குமரன், வேளாண்மை அலுவலர்கள் சரஸ்வதி, இசைச்செல்வன், சந்தை நிர்வாக அலுவலர் மற்றும் உதவி வேளாண்மை அலுவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story