விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 16 Aug 2021 10:59 PM IST (Updated: 16 Aug 2021 10:59 PM IST)
t-max-icont-min-icon

விபத்து வழக்கில் நஷ்டஈடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

விழுப்புரம், 

திருவண்ணாமலை மாவட்டம் வயலூரை சேர்ந்தவர் சம்பத் (வயது 32), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 30.4.2010 அன்று கண்டமங்கலம் பகுதியில் உள்ள சிறுபாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அந்த வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இதில் சம்பத் பலியானார். இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக நஷ்டஈடு கேட்டு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சம்பத்தின் மனைவி விஜயா வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்டஈடாக ரூ.8 லட்சத்து 36 ஆயிரத்தை வழங்க வேண்டும் என்று கடந்த 19.12.2013 அன்று உத்தரவிட்டார். ஆனால் அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்ட ஈட்டு தொகையை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் மனுதாரர் விஜயா சார்பில் வக்கீல் கருணாகரன், விழுப்புரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி செங்கமலச்செல்வன், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக்கழகம் வட்டியுடன் சேர்த்து ரூ.15 லட்சத்து 68 ஆயிரத்து 82-ஐ வழங்க வேண்டும் என்றும், இந்த தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்கவில்லையெனில் சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழகத்திற்கு சொந்தமான பஸ் ஜப்தி செய்யப்படும் என்று கடந்த 3.8.2021 அன்று உத்தரவிட்டார். இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு போக்குவரத்துக்கழகம் நஷ்டஈட்டு தொகையை வழங்காததால் நேற்று காலை விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு புறப்பட இருந்த அரசு பஸ்சை நீதிமன்ற உத்தரவின்படி கோர்ட்டு ஊழியர்கள் ஜப்தி செய்தனர். பின்னர் அந்த பஸ், கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

Next Story