திருக்கோகர்ணம் பகுதியில் குடிநீர் வசதி கேட்டு தொடரும் மறியல் போராட்டம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை


திருக்கோகர்ணம் பகுதியில் குடிநீர் வசதி கேட்டு தொடரும் மறியல் போராட்டம் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 16 Aug 2021 11:04 PM IST (Updated: 16 Aug 2021 11:04 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோகர்ணம் பகுதியில் குடிநீர் வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்துவது தொடர் கதையாகி வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதுக்கோட்டை:
சாலை மறியல்
புதுக்கோட்டை நகராட்சியில் திருக்கோகர்ணம் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சீராக குடிநீர் வினியோகம் இல்லாததால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் அவ்வப்போது சாலை மறியலில் ஈடுபடுவது தொடருகிறது. இந்த நிலையில் நேற்று திருக்கோகர்ணம் பகுதியில் 6-வது வார்டில் அண்ணா நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் குடிநீர் வசதி கோரி அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வினியோகத்திற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதைத்தொடர்ந்து மறியல் போராட்டத்தை பெண்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. புதுக்கோட்டை நகராட்சியில் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினை நிலவி வருகிறது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story