அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், விழுப்புரம் மாவட்டத்தில் 25 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம்,
தி.மு.க. அரசு, தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு ஊழியர்களுக்கு 27 மாதங்களாக பஞ்சப்படி கிடையாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் மற்றும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாதது, கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடுப்பை மீண்டும் வழங்காதது, காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு ஆக்கப்பூர்வமான அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லாததை கண்டித்தும் தமிழகம் முழுவதும் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலகங்கள் முன்பு மதிய உணவு இடைவேளையின்போதும், மாலை வேளையில் பணி முடிந்த பிறகும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
25 இடங்களில்...
விழுப்புரத்தில் உள்ள வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் கோவிந்தராஜிலு தலைமை தாங்கினார். தமிழ்நாடு வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட தலைவர் ராஜாராமன், மாநில செயலாளர் பார்த்திபன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் வேளாண்மைத்துறை அமைச்சு பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் இளவரசன், மாவட்ட துணைத்தலைவர் மணிமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் விழுப்புரம் தாலுகா அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், காணை, கோலியனூர், விக்கிரவாண்டி, கண்டமங்கலம், திருவெண்ணெய்நல்லூர், ஒலக்கூர், மயிலம், செஞ்சி, வல்லம், மேல்மலையனூர், முகையூர், வானூர், மரக்காணம் உள்பட 25 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story