தமிழக அரசின் நடவடிக்கைக்கு இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு


தமிழக அரசின் நடவடிக்கைக்கு இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு
x
தினத்தந்தி 16 Aug 2021 11:36 PM IST (Updated: 16 Aug 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

பனை மரங்களை வெட்ட தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

திருவாரூர்;
பனை மரங்களை வெட்ட தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கைக்கு இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர். 
பனை மரங்கள்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சாலையோரங்களில் பனை மரங்கள் கம்பீரமாக அணிவகுத்து நிற்கிறது. பனை மரத்தின் வேர் மிக ஆழமாக செல்வதால் புயலையும் தாங்க கூடிய வலுவை இயற்கை பனை மரங்களுக்கு தந்து உள்ளது. மேலும் ஆறுகள், குளம், ஏரி போன்ற நீர்நிலைகளின் கரைகளில் அமைந்துள்ள பனை மரங்கள் வெள்ள காலங்களில் கரை உடையாமல் பாதுகாத்து வருகிறது.
பனை மரங்கள் ஓட்டு வீடுகளுக்கான கூரைகளை செய்ய பயன்படுகிறது. பனை ஓலைகளை கொண்டு கீற்று, விசிறி போன்ற பொருட்களை தயாரிக்கலாம். அதுமட்டுமின்றி பனை வெல்லம், பனங்கற்கண்டு போன்ற சத்தான உணவு பொருட்களும் பனையில் இருந்து கிடைக்கிறது. 
வெட்ட தடை
பல்வேறு விதங்களில் பலன் அளிக்கும் பனை மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருகிறது. மேலும் சில இடங்களில் திராவகம் ஊற்றியும் அழிக்கப்பட்டு வருகிறது. அழிவின் விளிம்பில் உள்ள பனை மரங்களை பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக அரசு வேளாண்மை பட்ஜெட்டில் பனை மரங்கள் வெட்ட தடை விதித்து அறிவித்து உள்ளது. இதை இயற்கை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து இயற்கை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜவேலு கூறியதாவது 
வரவேற்பு
2019-ம் ஆண்டு முதல் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை பயன்படுத்தி பனை விதைகளை விதைப்பு செய்தோம். பின்பு பனை மரங்கள் விறகுக்காக வெட்டப்பட்ட போதும், திராவகம் ஊற்றி அழிக்கும் போது உரிய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். பனை குறித்த செய்திகளை பாடப்புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும். பனை வெல்லத்தை ரேஷன் கடைகள் மூலம் வினியோகம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தோம். 
இந்த நிலையில் தமிழக அரசு வேளாண் பட்ஜெட்டில் பனை மரங்களை வெட்ட தடை விதித்து அறிவித்து இருப்பதுடன், 76 லட்சம் பனை விதைகளை வழங்க முன்வந்துள்ளது. ரேஷன் கடைகளில் பனை வெல்லம் வழங்கவும் தமிழக அரசு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.
மேம்படும்
இதனால் பனை தொழில் மேம்பாடு அடைவதுடன், நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக உயரும். தவிர்க்க முடியாத சூழ்நிலையில் பனை மரங்களை வெட்ட நேர்ந்தால் அதற்கு மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டிருப்பது அழிவின் விளிம்பில் இருக்கும் பனை மரங்களை காப்பாற்றும். இந்த துரித நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறோம். 
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story