விடிய விடிய நடந்த கறி விருந்து கறம்பக்குடி பகுதியில் ஆடி மாத கிடா வெட்டு பூஜைகள் நிறைவடைந்தன
கறம்பக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த ஆடி மாத கிடாவெட்டு பூஜைகள் நேற்றுடன் நிறைவடைந்தன.
கறம்பக்குடி:
குலதெய்வ வழிபாடு
தமிழர்களின் பராம்பரியம், கலாசாரம் போன்றவை நீண்ட நெடிய வரலாறு கொண்டது. இதில் குல தெய்வ வழிபாடு முக்கியமானதாகும். இந்து மதத்தில் பிராமணர்கள் அல்லாத மற்ற சமூகத்தினர் அனைவருக்கும் சைவ, வைணவ எல்லைக்குள் அடங்காத கிராமப்புற கோவில்களில் உள்ள சாமிகள் குலதெய்வங்களாக உள்ளன. முன்னோர்கள் வழியில் பரம்பரை பரம்பரையாக இந்த குலதெய்வ வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. பொதுவாக திருவிழாவின்போதும், வீட்டில் நடைபெறும் சுபநிகழ்ச்சிகளுக்கு முன்னரும் குலதெய்வ கோவில்களில் வழிபாடு செய்வது வழக்கம்.
கிடாவெட்டு பூஜைகள்
இதை தவிர புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் குலதெய்வங்களுக்கு ஆடி மாதத்தில் நடைபெறும் கிடாவெட்டு பூஜைகள் பிரசித்திபெற்றவை. இந்த ஆண்டு ஆடி மாதம் முதல்நாள் தொடங்கி நேற்று வரை ஆடி அமாவாசை நாளை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் கிடாவெட்டு பூஜைகள் நடைபெற்றன. கருப்பர், கொம்புக்காரன், மாயன், அய்யனார், வேம்பன், காளி அம்மன் என கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குலதெய்வ வழிபாட்டு கோவில்களில் சுழற்சி முறையில் பூஜைகள் நடைபெற்றது.
150 ஆடுகள் வரை வெட்டப்பட்டன
இதில் சில கோவில்களில் பகல் நேரங்களிலும் ஒருசில கோவில்களில் இரவு நேரங்களிலும் பூஜைகள் நடைபெற்றன. இரவு பூஜை நடைபெறும் கோவில்களில் பெண்கள் கலந்துகொள்வது இல்லை. ஆண்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். தினமும் 50 ஆடுகள் முதல் 150 ஆடுகள் வரை வெட்டப்பட்டு கறிவிருந்து பரிமாறப்பட்டது.
இதுகுறித்து கிராம கோவில் பூசாரி ஒருவர் கூறுகையில், குல தெய்வ வழிபாடு, குடும்ப முன்னேற்றம், விவசாயம் செழிப்பு, வம்ச வளர்ச்சி என பல்வேறு காரணங்களுக்காக நடந்தப்படுகிறது. பங்காளி உறவுமுறை உள்ளவர்கள் சேர்ந்து மற்ற உறவினர்கள், நண்பர்களை அழைத்து நடத்தப்படும். இதுபோன்ற விழாக்கள் குடும்ப கட்டமைப்புகளை வலுபடுத்த உதவுகின்றன என்றார். கறம்பக்குடி பகுதியில் கடந்த 30 நாட்களாக நடந்த கிடாவெட்டு பூஜைகள் நேற்றோடு நிறைவுபெற்றன.
தினமும் 100 பேரின் பசியாற்றிய சமூக வலைத்தளக்குழு
கறம்பக்குடி பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக பூஜை சோறு சமூக வலைத்தளக்குழு உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. நண்பர்களுடன் இணைந்து கறி விருந்து சாப்பிட விளையாட்டாக தொடங்கப்பட்ட இக்குழு தற்போது ஏழை எளியவர்களின் பசியாற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கிடாவெட்டு பூஜை நடக்கும் இடங்களை ஏழை எளியவர்களுக்கு தெரிவித்து, அவர்களை விருந்துக்கு அழைத்து செல்லும் பணியில் இக்குழுவினர் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாதத்தில் தினமும் 100 பேர் என 3 ஆயிரம் பேரின் பசியாற இந்த குழுவினர் உதவி செய்து உள்ளனர்.
Related Tags :
Next Story