ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம்
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்
தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் நேற்று வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
பயிர்க்கடன், நகைக்கடன் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் தொடர்பான புள்ளி விவரங்கள் அளிக்க கால அவகாசகம் அளிக்க வேண்டும்.
கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் பணியாளர்கள், விற்பனையாளர்கள் ஊதியமின்றி பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கடன் வழங்குவது குறித்து தக்க தெளிவுரை வழங்க வேண்டும். சங்கங்களில் நகையீட்டின் பேரில் தங்க நகைக்கடன் பெற்றவர்கள் தள்ளுபடியை எதிர்நோக்கி நகைகளை திருப்பாமல் உள்ளனர். எனவே தவணை தவறிய கடன்களுக்கு ஏல நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு தக்க தீர்வு ஏற்படுத்த வேண்டும். 500 ரேஷன் கார்டுகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளுக்கு எடையாளரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர்.
கடைகளை அடைத்து...
நெல்லை மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் 1,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி இந்த சங்க ஊழியர்கள் பணிபுரியும் ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இதற்கிடையே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் நெல்லை சந்திப்பில் உள்ள அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க கவுரவ செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் காளிதாசன், செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் சண்முகச்சாமி, துணைத்தலைவர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story