மருத்துவ கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது
நெல்லையில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சித்தா கல்லூரியில் நேரடி வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லையில் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் சித்தா கல்லூரியில் நேரடி வகுப்புகள் நேற்று தொடங்கியது. இதில் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
மருத்துவ கல்லூரி
கொரோனா 2-வது அலை குறைந்து வரும் நிலையில் கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. கடந்த வாரம் முதல் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது.
இதுதவிர மருத்துவ கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கவும் அரசு உத்தரவிட்டது.
இதையொட்டி நெல்லை ஐகிரவுண்டு அரசு மருத்துவ கல்லூரியில் 2-வது ஆண்டு, 3-ம் ஆண்டு, 4-ம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று முதல் நேரடி வகுப்புகள் நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது.
வகுப்பு தொடங்கியது
இதையொட்டி நேற்று மாணவ-மாணவிகள் மற்றும் நர்சிங் மாணவிகளும் வந்தனர். அவர்கள் 2 தவணை கொரோனா தடுப்பூசிகளும் போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்கள் சரிபார்த்தனர். தொடர்ந்து கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் கல்லூரி டீன் ரவிச்சந்திரன் தலைமையில் பேராசிரியர்கள் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர். பின்னர் மாணவ-மாணவிகள் விடுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் கொரோனா பரிசோதனை முடிவு தெரியவரும். அதில் கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட மாணவ-மாணவிகள் மட்டும் வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். நேரடி வகுப்புகளை பேராசிரியர்கள் நடத்துகிறார்கள்.
சித்தா கல்லூரி
இதே போல் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரியிலும் நேற்று வகுப்புகள் தொடங்கியது. அங்கு மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் வந்து வகுப்புகளில் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story