என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடுவோம் நாராயணசாமி


என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு எதிராக தெருவில் இறங்கி போராடுவோம் நாராயணசாமி
x
தினத்தந்தி 16 Aug 2021 7:50 PM GMT (Updated: 16 Aug 2021 7:50 PM GMT)

தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் 100 நாட்களுக்குள் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசு நிறைவேற்றாவிட்டால் தெருவில் இறங்கி போராடுவோம் என நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி
தேர்தல் வாக்குறுதிகளை இன்னும் 100 நாட்களுக்குள் என்.ஆர்.காங்கிரஸ்- பா.ஜ.க. அரசு நிறைவேற்றாவிட்டால் தெருவில் இறங்கி போராடுவோம் என நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கவலை இல்லை

நாட்டின் 75-வது சுதந்திர தினவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி மக்களுக்கு பல அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில், நாட்டின் வளர்ச்சிக்காகவும், கட்டமைப்பை மேம்படுத்தவும், தொழிற்சாலைகளை உருவாக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் ரூ.100 லட்சம் கோடியில் மத்திய அரசு திட்டத்தை கொண்டு வந்துள்ளது என்று அறிவித்தார். கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் ஒரே திட்டத்தை திரும்ப திரும்ப வெளியிட்டு வருகிறார். அறிவித்த திட்டங்களை நிறைவேற்ற எந்தவித முனைப்பும் காட்டவில்லை. நாட்டு மக்களை பற்றி கவலைப்படவில்லை.

ஜனநாயக படுகொலை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து விவசாயிகள் பிரச்சினை, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார வீழ்ச்சி, கொரோனாவை மத்திய அரசு தவறான முறையில் கையாண்டது, அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர் செல்போன்கள் ஒட்டு கேட்ட விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 
இதனை பிரதமரும், மத்திய அரசும் ஏற்கவில்லை. நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடக்கப்பட்டு குறிப்பிட்ட தேதிக்கு முன்பாகவே முடிக்கப்பட்டு விட்டது. நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லாமல் பல சட்டங்களை அவசர அவசரமாக மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு நிறைவேற்றி உள்ளது. இது ஜனநாயக படுகொலை. இதற்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் விலை

தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு 100 நாட்களை பூர்த்தி செய்துள்ளது. 100 நாட்களின் சிறப்பான சாதனைகளை வெகுவாக பாராட்டுகிறோம். மக்களின் சுமையை குறைக்க பெட்ரோல் விலையில்  மாநில வரியில் இருந்து ரூ.3 குறைத்துள்ளார். இது தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 
கடந்த காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தமிழகத்தை ஒப்பிடும்போது புதுவையில் டீசல் ரூ.3-ம், பெட்ரோல் ரூ.2-ம் விலை குறைவாக இருக்கும். இந்தநிலை தற்போது மாறி உள்ளது. 
இதனால் புதுவை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்ஜெட் கூட்டத்தொடரை முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்க உள்ளார். முன்னதாக பெட்ரோல், டீசல் விலையை ரூ.3 குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

100 நாட்கள் கெடு

புதுச்சேரியில் ஆட்சி பொறுப்பேற்ற என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. கூட்டணி அரசு கடந்த 3 மாதங்களில் என்ன செய்தது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நடைமுறைப்படுத்த முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளித்துள்ளார்.
புதுவை மாநிலத்தின் பொருளாதார நிலை கேள்விக்குறியாக உள்ளது. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த என்.ஆர். காங்கிரஸ், பா.ஜ.க. கொடுத்த வாக்குறுதிகளை இன்னும் 100 நாட்களில் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் காங்கிரஸ் கட்சி   தெருவில்   இறங்கி  என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க.வை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story