தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்தம்
கடலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் பல்வேறு காரணங்களால் மிகுந்த மன உளைச்சலுடன் பணியாற்றி வருகிறார்கள். குறிப்பாக பயிர்க்கடன், நகைக்கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு கடன்கள் தொடர்பாக புள்ளி விவரம் தினந்தோறும் வெவ்வேறு வகையான படிவத்தில் கோரப்படுகிறது. இதற்கான உரிய கால அவகாசம் வழங்குவதில்லை. இதனால் பணியாளர்கள் புள்ளி விவரம் சேகரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.
சங்கங்களில் பணியாற்றி வரும் பெரும்பாலான பணியாளர்கள், விற்பனையாளர்கள் ஊதியமின்றி பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் 167 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள், ரேஷன் கடைகளில் பணியாற்றி வரும் ரேஷன் கடை பணியாளர்கள் சுமார் 1500-க்கும் மேற்பட்டோர் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அவர்கள் கடலூர் ஜவான்ஸ்பவன் அலுவலகத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
பொதுமக்கள் சிரமம்
இதற்கு மாவட்ட தலைவர் சாம்பசிவம் தலைமை தாங்கினார். ஆலோசகர் பாண்டியன், மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் மாரிமுத்து, மகளிரணி செயலாளர் லட்சுமிநாராயணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மண்டல இணை செயலாளர் சீனுவாசன், துணை தலைவர்கள் திருநாவுக்கரசு, சாந்தகுமார், இணை செயலாளர்கள் வாசுகி, உமாமகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த வேலைநிறுத்தத்தையொட்டி மாவட்டத்தில் பெரும்பாலான கூட்டுறவு கடன் சங்கங்கள், ரேஷன் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். காட்டுமன்னார்கோவில் ஞானவிநாயகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் வளாகத்தில் நடந்த போராட்டத்தில் ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி, ஒன்றிய தலைவர்அருள் செல்வன், ஒன்றிய பொருளாளர் குமார், ஒன்றிய செயலாளர் கனிமொழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story