கட்டிட தொழிலாளி கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது
கோவில்பட்டி அருகே, கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே, கட்டிட தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி கொலை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மேல பாண்டவர்மங்கலம் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் தாமோதர பாண்டியன் மகன் கனகராஜ் (வயது 38). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த 14-ந் தேதி இரவு வீட்டு முன்பு பேசிக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதை தடுக்க வந்த கனகராஜின் தாயார் பார்வதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. வெட்டுப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்தில் பலியானார். காயமடைந்த பார்வதி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொலை பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
கைது
குற்றவாளிகளை விரைந்து பிடிப்பதற்காக கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன், இன்ஸ்பெக்டர்கள் சபாபதி, சுஜித் ஆனந்த் தலைமையில் தனிப்படை அமைத்து தேடும் பணியை தீவிரப்படுத்தினர்.
கொலை தொடர்பாக நேற்று முன்தினம் மேலபாண்டவர்மங்கலம் கிராமத்தை சேர்ந்த பூலோக பாண்டியன் மகன் பாலகிருஷ்ணன் (25), அன்னை தெரசா நகரை சேர்ந்த ரத்தினவேல் பாண்டியன் மகன் ரஞ்சித் குமார் (25), சாஸ்திரி நகரைச் சேர்ந்த மாரியப்பன் மகன் மகேந்திரன் (21), அன்னை தெரசா நகரைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவபெருமாள் (25), ஆகியோரை போலீசார் கைது செய்தார்கள்.
மேலும் ஒரு வாலிபர்
இந்தநிலையில் நேற்று சாஸ்திரி நகரைச் சேர்ந்த சண்முகராஜன் மகன் சரவணகுமார் (21) என்பவர் கைது செய்யப்பட்டார்.
கொலைக்கு இவர்கள் பயன்படுத்திய அரிவாள், 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
கொலை தொடர்பாக பாலகிருஷ்ணன் போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிட தொழிலாளி கனகராஜ் எனது தந்தை பூலோக பாண்டியனை தாக்கினார். அப்போது எனது காலில் அடிபட்டு நடக்க முடியாத நிலையில் இருந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தேன். எனது கண் முன்னே எனது தந்தையை தாக்கிய கனகராஜை கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, நண்பர்கள் உதவியுடன் அரிவாளால் வெட்டினேன், என கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான 5 வாலிபர்களையும் போலீசார் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
Related Tags :
Next Story