6 வயது சிறுமி கொலையில் வாலிபர் கைது; தாயின் ‘பல்செட்டை’ உடைத்ததால் கொன்றது அம்பலம்


6 வயது சிறுமி கொலையில் வாலிபர் கைது; தாயின் ‘பல்செட்டை’ உடைத்ததால் கொன்றது அம்பலம்
x

விஜயாப்புரா அருகே 6 வயது சிறுமி கொலையில் வாலிபர் கைது செய்யப்பட்டார். தனது தாயின் ‘பல்செட்டை’ உடைத்ததால் சிறுமியை கொன்றது அம்பலமாகி உள்ளது.

விஜயாப்புரா:

சிறுமி மாயம்

  விஜயாப்புரா மாவட்டம் இண்டி தாலுகா கோர்டி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 6 வயதில் ஒரு மகள் இருந்தாள். இந்த நிலையில் கடந்த 12-ந் தேதி தம்பதியின் மகள் தனது சகோதரியுடன் கிராமத்தில் உள்ள கோவிலின் அருகே விளையாடி கொண்டு இருந்தாள். பின்னர் 6 வயது சிறுமி வீடு திரும்பவில்லை.

  அவளது சகோதரி மட்டும் வீட்டிற்கு சென்றாள். இதனால் 6 வயது சிறுமியை அவளது பெற்றோர் பல இடங்களில் தேடினர். ஆனால் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் தங்களது மகள் மாயமாகி விட்டதாக சிறுமியின் பெற்றோர் கோர்டி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் மாயமான சிறுமியை போலீசார் தேடிவந்தனர்.

முன்விரோதம்

  இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி கிராமத்தில் உள்ள ஒரு பள்ளத்தில் மாயமான 6 வயது சிறுமி பிணமாக மீட்கப்பட்டாள். அதாவது சிறுமியின் கை, கால்களை கட்டி அவளது உடலை சாக்கு பையில் வைத்து மர்மநபர்கள் வீசி சென்று இருந்தனர். இதனால் சிறுமி கொலை செய்யப்பட்டது உறுதியானது. ஆனால் சிறுமியை கொலை செய்தது யார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கோர்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

  இந்த நிலையில் சிறுமியின் குடும்பத்தினருக்கும், அதேபகுதியில் வசித்து வந்த சங்கனகவுடா (வயது 24) என்பவரின் குடும்பத்திற்கும் கடந்த 2 மாதங்களாக முன்விரோதம் இருந்தது போலீசாருக்கு தெரிந்தது. மேலும் சிறுமி கொலையான பின்னர் சங்கனகவுடா தலைமறைவானார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை கைது செய்து போலீசார் விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது.

பல்செட்டை உடைத்ததால்....

  அதாவது சங்கனகவுடாவின் தாயிக்கு பற்கள் உடைந்து உள்ளது. இதனால் அவர் செயற்கை பல் செட்டுகளை வாங்கி பயன்படுத்தி வந்து உள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பல் செட்டை சங்கனகவுடாவின் பாட்டி வீட்டின் வெளியே வைத்து இருந்தார். அப்போது அங்கு விளையாடி கொண்டு இருந்த 6 வயது சிறுமி பல்செட்டின் மீது கல்லை வீசினாள். இதில் பல் செட் உடைந்தது. இதனால் சிறுமியை, சங்கனகவுடாவின் தாய் அடித்து உள்ளார்.

  இதுதொடர்பாக சங்கனகவுடா, சிறுமியின் குடும்பத்தினருக்கு முன்விரோதம் இருந்து உள்ளது. இதனால் ஆத்திரத்தில் இருந்த சங்கனகவுடா விளையாடி கொண்டு இருந்த சிறுமியை கடத்தி சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் உடலை சாக்குமூட்டையில் கட்டி வீசியது அம்பலமாகி உள்ளது. சங்கனகவுடாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story