பசவராஜ்பொம்மையுடன் மந்திரி ஆனந்த்சிங் இன்று சந்திப்பு; கோரிக்கையை நிராகரித்தால் ராஜினாமா செய்ய திட்டம்


பசவராஜ்பொம்மையுடன் மந்திரி ஆனந்த்சிங் இன்று சந்திப்பு; கோரிக்கையை நிராகரித்தால் ராஜினாமா செய்ய திட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2021 2:34 AM IST (Updated: 17 Aug 2021 2:34 AM IST)
t-max-icont-min-icon

இலாகா மாற்றி கொடுக்காதததால் அதிருப்தியில் உள்ள மந்திரி ஆனந்த்சிங் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து பேசுகிறார். அவர் தனது கோரிக்கையை நிராகரித்தால் ஆனந்த்சிங் மந்திரி பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளார்.

பெங்களூரு:

மந்திரி ஆனந்த்சிங் அதிருப்தி

  கா்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு காரணமானவர்களில் ஆனந்த்சிங்கும் ஒருவா் ஆவார். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பா.ஜனதாவில் சேர்ந்திருந்தார். முதல்-மந்திரியாக எடியூரப்பா இருந்த போது, அவர் வனத்துறை மந்திரியாக இருந்தார். கடந்த மாதம் (ஜூலை) முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றபின்பு, புதிய மந்திரிகளுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாவில் ஆனந்த்சிங்குக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டது.

  ஆனால் தனக்கு சுற்றுலாத்துறை வேண்டாம் என்றும், ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்த வனத்துறை அல்லது மின்சாரத்துறை தான் வேண்டும் என்று மந்திரி ஆனந்த்சிங், முதல்-மந்திரி எடியூரப்பாவை வலியுறுத்தி வருகிறார். மேலும் தனக்கு சுற்றுலாத்துறை ஒதுக்கப்பட்டு உள்ளதால் அவர் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதன் காரணமாக தனது மந்திரி பதவி மற்றும் எம்.எல்.ஏ. பதவியை ஆனந்த்சிங் ராஜினாமா செய்ய இருப்பதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியானது.

இறுதி பேச்சுவார்த்தை

  பின்னர் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் முக்கிய தலைவர்கள் ஆனந்த்சிங்கை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஆனந்த்சிங் சமாதானம் அடைந்ததாகவும், பதவியை ராஜினாமா செய்யும் முடிவை கைவிட்டு விட்டு பல்லாரிக்கு திரும்பி விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனாலும் தனது முடிவில் ஆனந்த்சிங் உறுதியாக இருப்பதாகவும், வேறு இலாகா ஒதுக்கப்படவில்லை எனில், பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும் தனது ஆதரவாளர்களிடம் அவர் கூறி இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் உலா வருகின்றன.

  அதாவது இலாகா மாற்றும் விவகாரம் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை இன்று (செவ்வாய்க்கிழமை) மந்திரி ஆனந்த்சிங் சந்தித்து பேச இருப்பதாக தெரிகிறது. இறுதிக்கட்டமாக அவருடன் நடத்த உள்ள பேச்சு வார்த்தையில் இலாகா மாற்றி வழங்குமாறு அவர், பசவராஜ் பொம்மையிடம் கோரிக்கை விடுக்க உள்ளார். தனது கோரிக்கையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஏற்றுக்கொண்டால், பதவியை ராஜினாமா செய்யும் முடிவை அவர் கைவிடுவார் என்ற கூறப்படுகிறது.

இன்று ராஜினாமா?

  இலாகாவை மாற்றி கொடுக்க முடியாது என்று பசவராஜ் பொம்மை திட்டவட்டமாக கூறிவிட்டால், இன்று (செவ்வாய்க்கிழமை) முதலில் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்துவிட்டு, உடனடியாக சபாநாயகர் காகேரியை சந்தித்து தன்னுடைய எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தையும் ஆனந்த்சிங் கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இதன் மூலம் இலாகாவை மாற்றி கொடுக்கவில்லை என்றால், ஆனந்த்சிங் தனது பதவியை ராஜினாமா செய்வது ஏறக்குறைய உறுதியாகி இருக்கிறது.

கடும் நெருக்கடி

  அதே நேரத்தில் அதிருப்தியில் உள்ள ஆனந்த்சிங்கை சமாதானப்படுத்தும் முயற்சியில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையும் ஈடுபட்டுள்ளார். அவர் பதவியை ராஜினாமா செய்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்றும், அதனால் அவரை கட்சியில் இருந்து விலகுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை பசவராஜ் பொம்மை மற்றும் தலைவர்கள் எடுத்து வருகின்றனர்.

   ஆனந்த்சிங்கிடம், ராஜுகவுடா எம்.எல்.ஏ. தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது. இது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மைக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story