சம்பா நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் தீவிரம்
தா.பழூா் பகுதியில் சம்பா நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தா.பழூர்:
நாற்றங்கால் தயாரிக்கும் பணி
அரியலூர் மாவட்டம் தா.பழூர் டெல்டா பகுதி விவசாயிகள் பொன்னாற்று பாசனம் மூலம் சுமார் 5 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் ஒவ்வொரு ஆண்டும் சம்பா சாகுபடி செய்து வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக அரசால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தா.பழூர் விவசாயிகள் பயனடையும் வகையில் பொன்னாற்றிலும் தூர்வாரப்பட்டு தண்ணீர் திறக்கப்பட்டது.
ஆனால் இதுவரை பாசன வாய்க்கால்களில் தண்ணீர் தற்போது வரை திறக்கப்படவில்லை. இருப்பினும் ஆடி பட்டத்தில் சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். நாற்றங்கால் தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கி உள்ளது. இதில் பாரம்பரிய நாற்றங்கால், பாய் நாற்றங்கால் ஆகியவை தீவிரமாக தயாராகி வருகின்றன.
விதை நெல் விற்பனை
இதற்காக தா.பழூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் விற்பனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மானிய விலையில் சி.ஆர்.1009 நெல் ரகம் மற்றும் உயிர் உரங்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றனர். மேலும் விவசாயிகளுக்கு போதிய அளவு விதை நெல் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகள் தங்கள் விதை நெல் தேவைக்கு வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுக தா.பழூர் வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனர் அசோகன் கேட்டுக்கொண்டார். இதுவரை வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருந்து 20 டன் விதை நெல் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் விவரங்களுக்கு வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி பயனடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story