கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம்
நீலகிரியில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 96 ரேஷன் கடைகள் மூடப்பட்டன.
ஊட்டி
நீலகிரியில் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு சங்க ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 96 ரேஷன் கடைகள் மூடப்பட்டன.
அடையாள வேலைநிறுத்தம்
தமிழக அரசு பயிர், நகை மற்றும் மகளிர் குழு கடன் தொடர்பான விவரங்களை படிவத்தில் பெற உரிய கால அவகாசம் வழங்கவில்லை. மேலும் தள்ளுபடி தொடர்பான புள்ளி, விவரங்கள் வழங்க கால அவகாசம் வழங்க வேண்டும்.
ரேஷன் கடைகளில் பெண் ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களால் பொருட்களை எடை போட்டு வழங்க இயலாத நிலை உள்ளது. 500 ரேஷன் கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகளில் எடையாளர் பணியிடம் உருவாக்கி நிரப்ப வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று ஒருநாள் மாநிலம் தழுவிய அடையாள வேலைநிறுத்தம் நடைபெற்றது.
ரேஷன் கடைகள் மூடல்
இதனால் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஆகிய 4 வட்டாரங்களில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று பணிக்கு வராமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று கடன் பெறுவது, கணக்கில் பணம் செலுத்துவது போன்றவற்றை மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 96 ரேஷன் கடைகள் மூடப்பட்டது. அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்தனர். வேலைநிறுத்த போராட்டத்தால் அன்றாட அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன.
7 அம்ச கோரிக்கைகள்
இதுகுறித்து தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து ஊழியர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூறும்போது, நீலகிரியில் 75 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. கடந்த 6 மாத காலமாக சங்கங்கள் வரவு, செலவு இன்றி முடங்கி போயுள்ளது.
இதனால் இட்டு வைப்பு செய்துள்ள வைப்புதாரர்களுக்கு வைப்புத்தொகை திரும்ப வழங்க முடியவில்லை. எனவே போதிய நிதி ஆதாரம் வழங்க வேண்டும் என்பன உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டோம் என்றனர்.
Related Tags :
Next Story