ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாததை கண்டித்து ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாததை கண்டித்து ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யாதது மற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள், செவிலியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள் என தொகுப்பூதிய மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிபவர்களை காலமுறை ஊதியத்தில் மாற்றாதது ஆகியவற்றை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க நீலகிரி மாவட்ட பொருளாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆஸ்ரா கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் கொரோனா காலத்தில் முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண்டர் விடுப்பு ஆகியவற்றை வழங்கவில்லை. அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இல்லாதது கண்டிக்கத்தக்கது என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது.
தேர்தல் வாக்குறுதிகள்
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தியது, குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தியது வரவேற்கத்தக்கது. தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றனர். இதேபோல் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம், மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட அலுவலகம், வனத்துறை அலுவலகம் உள்ளட 7 அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அட்டை அணிந்து...
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மத்திய அரசு 1.7.2021-ந் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், வருவாய் துறை அலுவலர்களின் கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் ஆகிய 2 கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.
ஊட்டி கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம் போன்ற அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து அன்றாட பணிகளை மேற்கொண்டனர்.
Related Tags :
Next Story