குலசேகரன்பட்டினத்தில் புரோட்டா மாஸ்டர் கொலை


குலசேகரன்பட்டினத்தில் புரோட்டா மாஸ்டர் கொலை
x
தினத்தந்தி 17 Aug 2021 5:49 PM IST (Updated: 17 Aug 2021 5:49 PM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினத்தில் புரோட்டா மாஸ்டர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார்.

குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினத்தில் புரோட்டா மாஸ்டர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மனைவி, மாமியாரை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- 
புரோட்டா மாஸ்டர்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் மெயின் ரோடு தெருவை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 45). இவர் காயல்பட்டினத்தில் உள்ள புரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி பேச்சியம்மாள் (34). இவர்களுக்கு 11 வயதில் மகள் உள்ளார்.
அருணாசலத்துக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அவர் தினமும் இரவு மது குடித்துவிட்டு குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் பேச்சியம்மாளை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
தகராறு
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் அருணாசலம் மது குடித்துவிட்டு வந்து, பேச்சியம்மாளிடம் தகராறு செய்தார். அப்போது ஆத்திரத்தில் பேச்சியம்மாளின் இடது கை சுண்டு விரலை கடித்து காயப்படுத்தி இரும்பு கம்பியால் தாக்கினார். இதனால் கோபம் அடைந்த பேச்சியம்மாள், கணவர் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியை பிடுங்கி திருப்பி தாக்கியுள்ளார்.
பின்னர் பேச்சியம்மாள் தனக்கு கை வலி அதிகமாக இருந்ததால், அதே பகுதியில் வசிக்கும் தனது தாயார் சுடலை வடிவு வீட்டுக்கு கணவரை அழைத்து சென்றார்.
கழுத்தை நெரித்துக் கொலை
பின்னர், பேச்சியம்மாள் தனது தாயாருடன் சேர்ந்து அங்கு மதுபோதையில் படுத்து கிடந்த அருணாசலத்தின் கழுத்தை சுடிதார் பேண்ட் துணியை கொண்டு நெரித்ததாக கூறப்படுகிறது.
இதில் அருணாசலம் பேச்சு மூச்சு இல்லாமல் மயங்கிய நிலையில் கிடந்ததாகவும், உடனே பேச்சியம்மாள், அருணாசலத்தின் அண்ணன் ராஜாவிற்கு செல்போனில் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ராஜா அங்கு வந்தார். அங்கு அருணாசலம் பிணமாக கிடந்ததால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மனைவி-மாமியார் கைது
பின்னர் இதுபற்றி குலசேகரன்பட்டினம் போலீசில் ராஜா புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அருணாசலத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்குப்பதிவு செய்து பேச்சியம்மாள், அவரது தாயார் சுடலை வடிவு ஆகிய இருவரையும் கைது செய்தார். 
மதுபோதையில் தகராறு செய்த புரோட்டா மாஸ்டரை அவருடைய மனைவி, மாமியார் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story