நீடாமங்கலத்தில் அதிகாலை 2 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்கள் அவதி


நீடாமங்கலத்தில் அதிகாலை 2 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது போக்குவரத்து பாதிப்பு; பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 17 Aug 2021 6:11 PM IST (Updated: 17 Aug 2021 6:11 PM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலத்தில் அதிகாலை 2 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

நீடாமங்கலம், 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் ரெயில் நிலையம் உள்ளது.

நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு நேற்று அதிகாலை சுமார் 3.40 மணிக்கு காலி பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரெயில் வந்தது. பின்னர் சரக்கு ரெயில் பெட்டிகள் பிரித்து நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து 4.10 மணிக்கு மற்றொரு சரக்கு ரெயில் காலி பெட்டிகளுடன் நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வந்து நின்றது. மேலும் ஒரு சரக்கு ரெயில் நீடாமங்கலம் வழியாக திருவாரூர் நோக்கி சென்றது. 

இதனால் சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் ரெயில் கொரடாச்சேரி  ரெயில் நிலையத்தில் ½ மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வந்து சென்றது. வழக்கமாக அதிகாலை சுமார்4.45 மணிக்கு நீடாமங்கலம் வந்து செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ் 5.04 மணிக்கு நீடாமங்கலம் ரெயில் நிலையத்துக்கு வந்து புறப்பட்டு சென்றது.

அதன் பின் காலி பெட்டிகளுடன் நின்ற சரக்கு ரெயில் என்ஜின் திசைமாற்றி மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றது. இதற்கிடையே ஒரு ரெயில் என்ஜினும் தஞ்சைக்கு சென்றது. இதனால் அதிகாலை

5.47 மணிக்கு பிறகு ரெயில்வே கேட் திறக்கப்பட்டு நெடுஞ்சாலை போக்குவரத்து வாகனங்கள் புறப்பட்டு சென்றன. சுமார் 2 மணி நேரம் ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு இருந்ததால் சாலையின் இருபுறமும் பஸ்கள், லாரிகள், வேன்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உள்ளூர் மக்களும் ரெயில்வே கேட்டை கடக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டனர். நெடுஞ்சாலை வாகனங்கள் நீடாமங்கலம் நகரை கடந்து செல்ல வெகுநேரமானது. 2 மணி நேரம் தொடர்ந்து ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்ததால் நெடுஞ்சாலை போக்குவரத்தில் கடும் நெருக்கடி ஏற்பட்டது.

நீடாமங்கலத்தில் அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்பட்டு மக்கள் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி அவதிப்படுவதால் கிடப்பில் போடப்பட்டுள்ள நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்தை தொடங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவிடுத்துள்ளனர். மேலும் தஞ்சை முதல் நாகை வரை இருவழிச்சாலை திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும்.

நீடாமங்கலம் பேரூராட்சியையும் வையகளத்தூர் தேசிய நெடுஞ்சாலையையும் இணைக்கும் வகையில்பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் போக்குவரத்து பால பணியையும், நீடாமங்கலம்- மன்னார்குடி நெடுஞ்சாலையையும், கொத்தமங்கலம் சாலையையும் இணைக்கும் வகையில் தட்டி கிராம பகுதியில் கோரையாற்றில் கட்டப்பட்டு வரும் போக்குவரத்து பால பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story