ஆவணி மாத பிறப்பையொட்டி பழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்


ஆவணி மாத பிறப்பையொட்டி பழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம்
x
தினத்தந்தி 17 Aug 2021 6:24 PM IST (Updated: 17 Aug 2021 6:24 PM IST)
t-max-icont-min-icon

ஆவணி மாத பிறப்பையொட்டி பழனி ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

பழனி:
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட விழாக்காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதேபோல் மாதப்பிறப்பு, கார்த்திகை, விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வருகை அதிக அளவு இருக்கும். கொரோனா பரவல் காரணமாக பல கட்டுப்பாடுகளுடன் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். 
நேற்று ஆவணி மாத பிறப்பு மற்றும் செவ்வாய்க்கிழமை என்பதால் அதிகாலை முதலே அடிவாரம், சன்னதி வீதி, திருஆவினன்குடி கோவில் ஆகிய இடங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. மேலும் ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு மலைக்கோவிலில் உள்ள ஆனந்த விநாயகருக்கு சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் ஆனந்த விநாயகருக்கு வெள்ளிக்கவசம் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story