18-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
கூடலூர் அருகே 18-ம் கால்வாயில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.
கூடலூர்:
18-ம் கால்வாயில் தண்ணீர் திறப்பு
முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும் போதும், அக்டோபர் முதல் தேதிக்கு பிறகும், முல்லைப்பெரியாறு மற்றும் வைகை அணையின் நீர் இருப்பு 6,250 மில்லியன் கனஅடியாக இருந்தால் கூடலூர் அருகே உள்ள 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க அரசாணை உள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியது. இதேபோல் முல்லைப்பெரியாறு, வைகை அணையின் நீர் இருப்பு 11,500 மில்லியன் கனஅடிவரை இருந்தது.
இதனையடுத்து 18-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதைக்கருத்தில் கொண்டு 18-ம் கால்வாயில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.அதன்படி 18-ம் கால்வாயில் நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சிக்கு தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, மதகை இயக்கி பாசனத்துக்கு தண்ணீரை திறந்து வைத்தார்.
30 நாட்களுக்கு...
கால்வாயில் வெளியேறிய தண்ணீரில் விவசாயிகளும், அதிகாரிகளும் மலர்களை தூவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தண்ணீர் திறப்பு நிகழ்ச்சியில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன், மஞ்சளாறு வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் சவுந்தரம், உதவிப்பொறியாளர் பாசித்கான், 18-ம் கால்வாய் விவசாய சங்க தலைவர் ராமராஜ், நிர்வாக குழு உறுப்பினர்கள் சலேத்து, பெருமாள், தங்கராஜ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
18-ம் கால்வாயில் இருந்து நேற்று முதல் 30 நாட்களுக்கு, வினாடிக்கு 98 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
பி.டி.ராஜன் வாய்க்கால்
இதேபோல் உத்தமபாளையம் அருகே ராமசாமி நாயக்கன்பட்டியில் உள்ள பி. டி.ராஜன்-தந்தை பெரியார் வாய்க்காலில் இருந்து ஒரு போக நெல் சாகுபடிக்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி வாய்க்காலில் இருந்து தண்ணீரை திறந்து விட்டார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலர் தண்டபாணி,தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் தங்க தமிழ்செல்வன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. கவுசல்யா, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் கதிரேச குமார் உத்தமபாளையம் தாசில்தார் அர்ஜூனன், போலீஸ் துணை சூப்பிரண்டு உமா தேவி, ஊராட்சி மன்ற தலைவர்கள் பவுன்ராஜ் (ராமசாமி நாயக்கன்பட்டி), லட்சுமணன் (முத்துலாபுரம்) மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
பி.டி.ராஜன்-தந்தை பெரியார் வாய்க்காலில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மூலம் உத்தமபாளையம் தாலுகாவில் 830 ஏக்கர் நிலங்களும், தேனி தாலுகாவில் 4,316 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. 120 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story