கள்ளச்சந்தையில் மதுவிற்பனை; புகார் கொடுத்தவர்கள் மீது போலீசார் தாக்குதல்
தஞ்சை அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை தொடர்பாக புகார் கொடுத்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தையொட்டி தஞ்சையை அடுத்த ஆலக்குடி கிராமத்தை சேர்ந்த கிராம நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் மற்றும் கிராம மக்கள் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவிடமும் ஒரு புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
ஆலக்குடி கிராமத்தில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதனால் படித்தவர்கள், விவசாயிகள் மதுவிற்கு அடிமையாகி, பெண்கள், குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து மதுக்கடையை அகற்றக்கோரி கிராம மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. அதன் பின்னர் எங்கள் பகுதியை சேர்ந்த 3 பேர், மதுபாட்டில்களை கள்ளச்சந்தையில் வாங்கி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.
இது தொடர்பாக கிராம மக்கள் போலீசாரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடர்ந்து கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக புகார் செய்தவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதுடன் பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர்.
எனவே கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சந்தையில் மது விற்பதை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும். மதுவிற்கு எதிராக வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும். புகார் கொடுத்த மக்கள் மீது தாக்குதல் நடத்திய போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தஞ்சையை அடுத்த வேங்குராயன்குடிக்காட்டை சேர்ந்த கிராம மக்கள் கொடுத்த மனுவில்,வேங்குராயன்குடிக்காட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்காலிகமாக ஊர் பொது இடத்தில் செயல்பட்டு வருகிறது. எனவே கொள்முதல் நிலையத்துக்கு நிரந்தரமாக கட்டிடம் கட்டித்தர வேண்டும். இதற்காக ஊராட்சிக்கு சொந்தமான ஊர் பொது இடத்தினை பயன்பாட்டிற்கு தர முன்வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் பூதலூரை அடுத்த மாரனேரியை சேர்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழுவினர் நடராஜன், ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மாரனேரி கிராமத்தில் ஏரியை ஒட்டிய பகுதிகளில் 80 ஆண்டுகளுக்கு மேலாக 120 ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறோம். சிலர் ஏரிக்குள் ஆக்கிரமிப்பு செய்ததை தொடர்ந்து குத்தகை மற்றும் பட்டா வழங்கப்பட்டு விவசாயம் செய்து வருகின்ற 120 ஏக்கர் நிலங்களையும்சேர்த்து எடுப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இது குறித்து இரண்டு கட்ட பேச்சு வார்த்தை நடத்தி மனு அளித்தோம். அதைத்தொடர்ந்து கோர்ட்டில் உள்ள சீராய்வு மனு உத்தரவு வரும் வரை காத்திருப்பதாகவும், நடவடிக்கைகளை கை விடுவதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
ஆனால் மறுநாளே கிராமத்தில் தண்டோரா மூலம் நில எடுப்பு என அறிவிப்பு செய்யப்பட்டது. எனவே நாளை(புதன்கிழமை) நில எடுப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். சீராய்வு மனு மீது உத்தரவு வரும் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்க கூடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தெய்வீக தமிழ் புரட்சி பாசறையின் நிறுவன தலைவர் ஆதிமதனகோபால் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டு அடுத்த மாதம்(செப்டம்பர்) 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளதால் விநாயகர் சிலைகள் வடிவமைப்போர் பல லட்சம் செலவில் சிலைகளை செய்துள்ளதால், அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட அனுமதி வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்திட அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story