சதுர்த்தி விழா ஊர்வலத்துக்கு அனுமதி கிடைப்பதில் சந்தேகம் வீடுகளில் வைத்து வழிபட 15 விதமான விநாயகர் சிலைகள் குளங்களில் களிமண் எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு


சதுர்த்தி விழா ஊர்வலத்துக்கு அனுமதி கிடைப்பதில் சந்தேகம் வீடுகளில் வைத்து வழிபட 15 விதமான விநாயகர் சிலைகள் குளங்களில் களிமண் எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் தவிப்பு
x
தினத்தந்தி 17 Aug 2021 9:25 PM IST (Updated: 17 Aug 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

சதுர்த்தி விழா ஊர்வலத்துக்கு அனுமதி கிடைப்பதில் சந்தேகம் உள்ளதால் வீடுகளில் வைத்து வழிபடும் வகையில் சிறிய அளவில் 15 விதமான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.

திண்டுக்கல்:
இந்துக்களின் முக்கிய பண்டிகையாக விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்பில் வீடுகள் மட்டுமின்றி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. எனவே வழக்கம் போல் சிலைகள் வைத்து வழிபட இந்து அமைப்பினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகளால் முக்கிய நாட்களில் கோவில்களுக்கு சென்று பக்தர்கள் வழிபட அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் சதுர்த்தி விழா ஊர்வலத்துக்கு அனுமதி கிடைப்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. பொதுவாக சதுர்த்தி விழாவுக்கு பிரமாண்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படும். ஆனால் ஊர்வலத்துக்கு அனுமதி கிடைப்பதில் சந்தேகம் உள்ளதால், வீடுகளில் வைத்து வழிபடும் வகையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.
15 விதமான சிலைகள் 
அதன்படி திண்டுக்கல் அருகேயுள்ள நொச்சிஓடைப்பட்டியில் களிமண்ணால் ½ அடி உயரம் முதல் 2 அடி உயரம் வரையுள்ள விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடக்கிறது. இதில் மூஷிகவிநாயகர், சிம்ம விநாயகர், நர்த்தன விநாயகர், லட்சுமி விநாயகர் என 15 வகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் சதுர்த்தி விழாவுக்காக திண்டுக்கல்லில் இருந்து தமிழகம் முழுவதும் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு சிலைகள் அனுப்பி வைக்கப்படும். ஆனால் கொரோனா கட்டுப்பாட்டால் வெளிமாநில வியாபாரிகள், சிலை வாங்குவதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதனால் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமே குறைந்த அளவில் சிலைகள் வாங்க ஆர்டர் கொடுத்துள்ளனர். இதனால் சிலை தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது.
களிமண் எடுக்க முடியாமல் தவிப்பு
இதற்கிடையே சிலைகள் தயாரிப்பதற்கு தேவையான களிமண்ணை, குளங்களில் எடுப்பதற்கு உரிய அனுமதி கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்கள், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிலைகளை தயாரிக்க களிமண் எடுக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, சிலைகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் குளங்களில் களிமண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 


Next Story